Friday, March 13, 2015

நெடுங்கதை – துல்லிய தேசம் அத்தியாயம் 4 Henry Ford Story

நெடுங்கதை – துல்லிய தேசம்
அத்தியாயம் 4
எதோ சொல்லனும் என்று நினைத்தது மறந்து விட்டது . உம் நினைவுக்கு வருது. எனக்கு கல்யாணம் ஆகி 6 வருடம் ஆகுது. என் வீட்டுக்காரர் என் சொந்த ஊரு கீழகரனைக்கு இது வரைக்கும் 3 முறை தான் வந்து இருக்காரு. இத்தனைக்கும் மறைமலை நகரில் இருந்து 4கிலோ மீட்டர் தொலைவு தான். கடைசியா என்னோட பெரியப்பா சாவுக்கு ஆட்டோவில் மாலையும் கையுமா போயிருந்தோம்.ரோடு சரியிலாததாலே ஊர் கோவில் திருப்பதில் ஆட்டோவை விட்டு எறங்கியவரு ரோட்டோர ஹென்றி போர்ட் கட்டிய கோட்டைச்சுவரை பார்த்து
“இவனுங்களை எல்லாம் அமெரிக்காவுக்கு போயி திருநெல்வேலி விச்சருவாளால் கொண்டு வெட்டணும் வானதி. உங்க ஊருக்கு வந்தாலே மனசு பதறுது. அது தான் வரது இல்லை ”
என்று சொன்னாரு.
சாவு வீட்டுக்கு இன்னும் 5 நிமிட நடை இருந்ததாலே நானும் அவருக்கு தெளிவா பதில் சொன்னேன்.
” இவனுங்களை ,அமெரிக்க மொதலாளிகளை வெட்டி சாச்சா பிரச்சனை தீர்துடுமா ? இந்த ஊருக்கு வாக்கப்பட்ட உங்களுக்கே இவ்வளவு வருத்தம் இருக்கும் போது இந்த ஊரிலேயே பிறந்து வளந்த எனக்கு எவ்வளவு கோபம் இருக்கும் . என்ன செய்ய ஊரு மக்களை அரசாங்கம் பொய்யா வேலை கொடுக்கின்றேன் , வேறு இடம் கொடுக்கிறேன் என்று வாயாலேயே மொழம் போட்டு ஏமாத்திட்டாங்க. விஎஒ-வில் இருந்து அன்னிக்கு இருந்த காஞசிபுரம் கலைக்டர் வரைக்கும் இப்படி பேசியே எங்களை கொண்ணுட்டாங்க. நாம ,நாங்க எதிர்த்து போராட வேண்டியது எங்க நிலத்துக்கு புரோக்கர் வேலை பாத்த அரசாங்கத்தை எதிர்த்து தான் ”
அதுக்கு அப்புறம் சாவு வீடு வந்ததாலே பேச்சை நிறுத்திட்டு வீட்டுகுள் போனோம்.
பெரியப்பா சாவுக்காண காரணத்தையும் அவரு சாவுக்கு வந்து இருந்த நொடிஞ்சு போன விவசாயி சீத்தா லச்சுமன நாயுடு கதையையும் அப்புறமா சொல்லுறேன்.
தொடரும்

நெடுங்கதை – துல்லிய தேசம் அத்தியாயம் 3 Henry Ford Story

நெடுங்கதை – துல்லிய தேசம்
அத்தியாயம் 3
நேற்று கூட ஹென்றி போர்ட் கார் கம்பெனியில் வேலை செய்து வெளியேற்றப்பட்ட ஒரு தம்பியை பார்த்து பேசினேன். வாடிய முகத்துடனும் , சவரம் செய்யப்படாத முகத்துடனும் இருந்தாரு. மறைமலை நகரில் நாங்க வாடகைக்கு இருந்த வீட்டுக்கு பக்கத்தில் தான் நண்பர்களுடன் வீடு எடுத்து தங்கி போர்டில் வேலைக்கு போய்கொண்டு இருந்தாரு. என்னுடைய கணவருக்கு அவர் நல்ல அறிமுகம் ஆனவரு. நாங்க வீடு கட்டி கரும்பூருக்கு வந்த பின்னால அவரை பார்த்தது இன்று தான். அவரிடம் நான் மறைமலை நகர் நூலகத்தில் பேசிய பேச்சின் சாராம்சம் இது தான் …
” மறைமலை நகர் ஹென்றி போர்ட் கார் கம்பெனியில் 10%க்கும் குறைவானவர்களே நிரந்தர தொழிலாளர்கள். மீதி இருக்கிற தொழிலாளர்கள் எல்லாம் ஒரு வருட அக்ரிமண்டில் வேலையில் இருகின்றவங்க. அதுவும் மாத சம்பளம் ரூ 7,500 மட்டும் தான் ஒரு வருடம் கழித்து மீண்டும் வேற வேலை தேடியாகனும். அல்லது சொந்த ஊரு தேனிக்கே போயாகனும். ”
மறைமலை நகர் ஹென்றி போர்ட் கார் கம்பெனியில் வேலை செய்யும் தம்பி ,தங்கைகளை அவர்களின் நீல நிற சீருடையில் நான் பார்த்த போது எல்லாம் ஒரு காலத்தில் பெருமை பட்டுக்கொள்வேன். ஆனா இப்ப இவரு சொல்லும் ஒரு வருட அக்ரிமண்ட் ,ரூ 7,500 மாத சம்பளம் என்பதை கேட்டபின்னால மனசு கொதிச்சு போச்சு. நினைத்து பார்த்தாலே ஒருபக்க தலை வலிதான் வருது . நாம மருந்து கம்பெனி கட்டிஇருந்தா கூடகுறைந்த சம்பளமாக ரூ 10,000கொடுத்து இருக்க முடியும். ஆனா ஹென்றி போர்ட் கார் கம்பெனி மொதலாளிங்க இப்படி அடிமாட்டு சம்பளம் கொடுத்து நம்ம மக்களை தத்தளிக்க விடறாங்களே !மனசுக்குள்ள இவனுங்களை, அமெரிக்க மொதலாளிகளை திட்ட நெறைய கெட்ட கெட்ட வார்த்தையா வருது. ஆனா பொம்பள பிள்ளை இல்லையா வெளியே எப்படி சொலுவது. தூத்தேரி ஒருநாளைக்கு அமெரிக்காவில் $120 சம்பளம் கொடுக்கும் இதே கம்பெனி, ஆனா $4 சம்பளம் தான் இந்தியாவில் கொடுகிராங்க . என்ன கொடுமை இது ? ஒரு நாள் சம்பளம் ரூ 250 ல் என்ன செய்வாங்க நம்ம பிள்ளைகள் ?
தொடரும்

நெடுங்கதை - துல்லிய தேசம் அத்தியாயம் 2 Henry Ford Story

நெடுங்கதை - துல்லிய தேசம் 

அத்தியாயம் 2

நான் இந்த கதையிலே அரசியல் பத்தியெல்லாம் பேச போறது இல்லைங்க. ஆனா கதையில் அரசியல் பத்திய உள் செய்திகள் வந்தால் அதுக்கு நான் பொறுப்பில்லைங்க. கார் கம்பெனிக்கு யாரு கீழக்கரனை நிலத்தை எல்லாம் எடுத்தது ,யாரு கம்பெனி கட்டியபின்பு தொறந்து  வைத்தது என்று கூறும் போது அதுல அரசியல் வருமே நா என்ன செய்ய ?கார் கம்பெனியை  தொறக்க டாகடர் கலைஞர் வந்ததாகாவும் அவரை பொத்தேரி அருகில் அன்னிக்கு பார்த்ததாகவும் என் வீட்டுக்காரர் சொல்லி இருக்காரு. அம்மா ஆட்சியில் தான் கீழக்கரனை நிலத்தை எல்லாம் கவர்மண்டே தரகராக இருந்து கார் கம்பெனிக்கு வாங்கி தந்ததாக அப்பா கூறியதாக நினைவு. எதுக்கு என் நிலத்தை ஹென்றி போர்டுக்கு வாங்கி தர தமிழ்நாடு கவர்மெண்டு புரோக்கர்-தரகு  வேலை செய்யணும் ?  எவ்வளவு கமிசன் யாரு வாங்கினாங்க ? வினவு இணைய தளத்தில் படித்த போது புதிய பொருளாதார கொள்கை ,அந்நிய செலவாணிக்கான முதலீடு என்று என்ன என்னமே காரணத்தை செல்லுறாங்க! அதை பத்தியெல்லாம் எங்க   கீழக்கரனை விவசாய மக்களுக்கு என்ன தெரியுங்க ? நா அப்ப ரொப்ப சின்னவ , பள்ளிக்கூடத்தில்  எழாவது தான் படிச்சிட்டு இருந்தேன். அதனால என்னால ஒன்னும் செய்ய முடியல. இனியாவது தெரிந்துக்கொண்டு மத்த ஊரையாவது ஹென்றி போர்ட் மாதிரியான ஆளுங்க கிட்ட இருந்து காப்பாத்தலாம் இல்லையா ? அதுக்கு தான் இந்த உண்ம கதையை எழுதுறேன்.


தொடரும்



நெடுங்கதை - துல்லிய தேசம் Henry Ford Story

நெடுங்கதை - துல்லிய தேசம் 

அத்தியாயம் I 

கரும்பூர் கிராமம் ,அருகாமையில் மறைமலைநகர் நகராச்சியில்  , செங்கல்பட்டு வட்டம் காஞ்சிபுரம் மாவட்டம் என்கின்ற ஊரில் வாழும் வானதி சரவணனாகிய நான் கூறுவது யாது எனில்

"

எங்க வீட்டுக்கு பக்கத்தில் உள்ள உலகில் விலையுயர்ந்த கார் கம்பெனியின் கிடங்கின் நீலநிற உலோக கூரைகள், அதன் பக்க தடுப்புகள் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகின்றன. முன்பொரு  காலம் இப்படி தான் நெல்லும் ,கருனைகிழங்க்கும் விளைந்த கீழக்கரனை நிலம்   எங்களை துரத்தியது..., வாழ்விழந்து போனோம். நான்கு ஏக்கர் நன்செய் நிலமும் ,கிணரும் , பம்பு செட்டும் கைவிட்டு போனது.சுதந்திரத்துக்கு முன் வெள்ளைக்காரன் எங்களை போன்ற ஏழை பாழைளுக்கு  ,தலித் மக்களுக்கு விவசாயம் செய்ய கொடுத்த      நத்தம் புறம்போக்கு நிலமெல்லாம் நாம சுதந்திரம் அடைந்து சரியாக அம்பதாவது வருடம் வெள்ளைக்கார ஹென்றி போர்டு  கம்பெனிக்கே ரொம்ப கொரஞ்ச விலையில் பறிபோனது.அந்த மண்ணின் மீது எனக்கென்று ஒரு ஆசையும் இருந்தது. அப்பாவுக்கு வரும் பங்கில் நான் படித்த மருந்தாளுனர் B.Pharm  படிப்பை வைத்து கவர்மண்ட் லோன் வாங்கி சின்னதா இரும்பு சத்து டானிக் செய்யும் கம்பெனி ஆரபிக்கலாம் என்று பிளான் செய்தேன். ஹும் என்ன செய்ய இப்ப எல்லாம் போய் பிரஞ்சுகாரர் நடத்தும் இரும்பு சத்து கம்பெனியிலேயே  தர கட்டுப்பாட்டு அதிகாரியா வேலை செய்துகிட்டு இருக்கேன். ஆமாம் நம்ம கனவெல்லாம் கறைக்கப்பட்டாலும் , வாழ்வே நடுத்தெருவுக்கு வந்தாலும் ஏதோ வாழ்ந்து தானே ஆகணும். என் வலிகளை எல்லாம் குறைக்க ஒரு கவிதையாவது எழுத எனக்கு உரிமையுள்ளது அல்லவா ?

"வானத்து மீன்களாய் நாங்கள்" 

அன்று விண்மீன்கள் உலவும் இரவில் 

நிலவொளியில்  எங்கள் கழனிக்கு அருகில் 

ஓடையில்  சலசலக்கும் மீன்களை 

வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தோம்.

இன்று  ஹென்றி போர்டின்  தொழில்சாலை இட்ட 

முற்றுகை சுவரின் தாகத்தில் 

கீழக்கரனை கிராமத்தில் முள்ளிவாய்க்காலாக 

முடங்கி போனோம் "





"

தொடரும்