Monday, August 4, 2014

"வாழ்த்து" என்ற சொல் பற்றி தமிழ்ப் பேராசிரியர் திரு செந்தில் நாராயணன் அவர்களுடன் ஒரு விவாதம் Discussion about the word Greet

தமிழ்ப் பேராசிரியர் திரு செந்தில் நாராயணன் அவர்களுடன் "வாழ்த்து" என்ற சொல் பற்றி ஒரு விவாதம் : 

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி : "வாழ்த்து" என்ற சொல்லை உரிச்சொல்லாக கொள்ளலாமா ?

செந்தில் நாராயணன் :வாழ்த்து என்பதை முதல்நிலைத் தொழிலாகுபெயராகக் கொள்வதே பொருந்தும். வளை (bangle) போல

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி :தொல்காப்பியர், (வழுத்தல்) = பரவு, பழிச்சு இதனை உரிச்சொல்லாக ஏற்கின்றார் அல்லவா ? வழுத்தல் என்பது வாழ்த்துதல் என்ற பொருள் படுமே !{பரவும் பழிச்சும் வழுத்தின் பொருள (தொல்காப்பியம் 2-8-85)}

செந்தில் நாராயணன் : ’பரவும் பழிச்சும் வழுத்தின் பொருள’ என்பதே நீங்கள் குறிப்பிடும் நூற்பா. தொல்காப்பிய உரியியலில் பொருள் விளக்கம் பெற்ற சொற்கள் உரிச்சொற்களே. பொருள் விளக்கம் செய்ய பயன்பட்ட சொற்கள் உரிச்சொற்களாக இருக்க வேண்டிய கட்டாயமில்லை அல்லவா?

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி : தொல்காப்பியர் "வழுத்தல்" என்ற சொல்லை உரிச்சொல்லாக தானே வகைமை படுத்தியுள்ளார் !

செந்தில் நாராயணன் : வழுத்தல் என்பது பரவு, பழிச்சு என்னும் உரிச்சொற்களை விளக்குவதற்காகப் பயன்படுத்தப்பட்ட சொல். (பயிலானதனவற்றைப் பயின்றவை சார்த்தி தொல் உரி. 1) அதாவது வழக்கில் அதிகம் பயிலாத சொற்களை வழக்கில் அதிகம் பயிலும் சொற்களைக் கொண்டு விளக்குதல். தந்தை என்றால் அப்பா என்பதற்கிணங்க.

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி :முதல்நிலைத் தொழிலாகுபெயருக்கு வேறு சில உதாரணம் கொடுங்கள் ஐயா

செந்தில் நாராயணன் : ’முறுக்கு’ (தின்பண்டம்), அச்சகத்தைக் குறிப்பிட ஆங்கிலத்தில் வழங்கப்படும் 'Press' என்பதும், அஞ்சலைக் குறிப்பிடும் ‘Post’ என்பதும் நாம் வழங்கும் முதல்நிலைத்தொழிலாகுபெயருக்கு இணையானவையே.

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி : ஐந்து முறுக்கை/முறுக்குகளை உண்டேன்.எது சரி ஐயா ?

செந்தில் நாராயணன் : ஐந்து என்பதைச் சேர்த்த பிறகு முறுக்குகள் என்னும் பன்மை தேவையில்லை. ஆயிரு திணையின் இசைக்குமன சொல்லே என்றுதான் அமைந்துள்ளது சொல்லதிகார முதல் நூற்பா. ஆயிரு திணைகளில் இசைக்குமன என்று பன்மை சேர்க்கப்படவில்லை. தவிர தொல்காப்பியம் போன்ற இலக்கணநூல்கள் அவை எழுதப்பட்ட காலத்திய தமிழ் மொழியின் அமைப்பை விளக்குகின்றனவே ஒழிய இன்றைய தமிழுக்கு அவை எந்த விதிகளையும் கட்டாயப்படுத்தவில்லை. அது தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல்களின் பணியும் அன்று. தொல்காப்பிய இல்ககண உருவாக்க நெறிமுறைகளே இன்றைய தேவை.

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி :நண்பன் கொடுத்த முறுக்கை/முறுக்குகளை உண்டேன்.எது சரி ஐயா ?

செந்தில் நாராயணன் :நண்பன் கொடுத்தது ஒன்று எனில் முறுக்கு என்றும் நண்பன் கொடுத்தவை ஒன்றுக்கு மேல் எனில் முறுக்குகள் என்றும் வரும்.

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி :
"வாழ்த்து" முதல்நிலைத் தொழிலாகுபெயர் எனில்....
உன்னை "வாழத்தி பாடுகின்றேன்".
விருந்தினரை "வாழத்தி பேசினான்".
நண்பன் பொங்கல் "வாழ்த்து கூறினான்"
இவ் உதாரணங்களில் வாழத்தின் பயன்பாடு எந்த இலக்கண அடிப்படையில் உள்ளது ஐயா ? வினையுரிச்சொல்லா?[வினையடையா ?] அல்லது முதல்நிலைத் தொழிலாகுபெயரா?

செந்தில் நாராயணன் :
வாழ்த்தி = செய்து வாய்பாட்டு வினையெச்சம்
(செய்து காட்டினான், பாடிக் காட்டினான், ஓடிச் சென்றான் போல)

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி : அந்த உதாரணங்களில் "வாழ்த்து" என்ற சொல்லை வினைச்சொல்லாக ஏற்க்க வேண்டும் அல்லவா ஐயா ?

செந்தில் நாராயணன் : வாழ்த்து என்பது அடிப்படையில் தொழில் பெயர், பாடு - பாட்டு, ஓடு - ஓட்டம், வீழ் - வீழ்ச்சி, செய் - செயல், பார்- பார்வை போல வாழ் - வாழ்த்து

செந்தில் நாராயணன் :வாழ் - வாழ்த்து என்பது தவறு. வாழ் என்பது வாழ்கிறேன் வாழ்வேன் என்ற வினைமுற்றுகளுக்கான வினையடி. வாழ்த்து என்பது வாழ்த்தினேன் வாழ்த்துகிறேன் என்பன போன்ற விணைமுற்றுகளுக்கான வினையடி. தவறாக பதிந்துவிட்டேன் மன்னிக்கவும். 

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி : ஆம் ஐயா வாழ்தல் ,வாழ்த்துதல் இரண்டும் வேறு வேறு பொருள் தரும்

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி : "வாழ்த்து" என்ற சொல்லை ஒருமுறை வினையெச்சமாகவும் வேறு மறு முறை முதல்நிலைத்தொழிலாகுபெயராகவும் குறிப்பிட்டு உள்ளீர்கள் ஐயா ? எதை நான் ஏற்பது ?

செந்தில் நாராயணன் : செய் = வினையடி, செய்தேன் = தன்மை ஒருமை இறந்தகால வினைமுற்று, செய, செய்து = வினையெச்சம், செய்த, செய்கின்ற, செய்யும் = பெயரெச்சம், செய்தவன் = வினையாலணையும் பெயர், செயல் = தொழில்பெயர். இவை போல ஒரு வினையடி மூவிடம் X மூன்றுகாலம் X ஒருமை பன்மை என 27 வகையான வினைமுற்றுக்களைப் பெற்றுவரும். தல் ,அல், கை, அம் போன்ற ஈறுகளைப் பெற்று தொழி பெயராக வரும் (எ - டு) ஓடுதல், செயல், ஆட்டம், வருகை. சில வேலைகளில் வினையடியே தொழில் பெயராக வழங்குவதும் உண்டு. வாழ்த்து, முறுக்கு போல. பெறு (வினையடி) - ‘பேறு’ முதல் நிலை நீண்ட தொழில் பெயர். நான் பெற்ற பேறு 

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி : Sir really excellent narration of Our Tamil Grammar. My hate off. I wish u

செந்தில் நாராயணன் : வளை = ‘வளைத்தல்’ தல் விகுதி பெற்ற தொழில்பெயர். அதுவே வளை அணிந்த கைகள் என்ற இடத்தில் முதல் நிலையாகிய வினையடியே தொழில்பெயராகி அத்தொழிலால் உருவாக்கப்பட்ட அணிகலனைக் குறித்து வருவதால் இது முதன்நிலைத்தொழிலாகுபெயராகிறது. 

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி : I understood sir

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி : வாழ்த்து" என்ற சொல்லுடன் "க்கள்" அல்லது "கள்" பன்மை விகுதி இலக்கண படி ஏற்புடையதா ஐயா ?

செந்தில் நாராயணன் : writings = எழுத்துக்கள் (அவருடைய எழுத்துக்களை நான் படித்ததில்லை) என்பதைப்போல வாழ்த்தையும் ஆங்கில மொழிச்சாயலில் நாம் பன்மையாக்கிவிட்டோம். ஆனால் வாழ்த்துக்கள் என்று சொல்வதா அல்லது வாழ்த்துகள் என்று சொல்வதா என்பதில் எனக்குமே இன்னமும் தெளிவில்லை.

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி : வாழ்த்து என்பதை வினையடையாக நினைத்து இருந்தேன். அது வினையடி என்று எனக்கு மிக்க நன்றி ஐயா.

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி :
//வாழ்த்தையும் ஆங்கில மொழிச்சாயலில் நாம் பன்மையாக்கிவிட்டோம். //
ஒருவர் உங்களுக்கு கூறும் "வாழ்த்து" என்பது எண்ணுவதற்கு [is it countable ?]ஏற்றதா ? இல்லையே ? அப்படி எனில் வாழ்த்துக்கள்[கள்] தவறு தானே ?

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி : நன்னன் அவர்கள் வாழ்த்துகள் என்பதையும் பெமு அவர்கள் வாழ்த்துக்கள் என்பதையும் ஆதரிக்கின்றனர்.

செந்தில் நாராயணன் : தவறாக நினைக்க வேண்டாம். நாளை ஒப்படைக்கவேண்டிய பணி இன்னமும் முடிவடையவிலை. மீண்டும் நாளை தொடர்கிறேன். விடைகொடுங்கள்.

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி : முறுக்குகள் எண்ணபடலாம் . வாழ்த்துகளை எண்ண முடியுமா ஐயா ?
நன்றி ஐயா நாளை மீண்டும் சிந்திப்போம்!

தமிழ் உள்ளவரை இவ் விவாதம் தொடரும் ......

குறிப்பு :
எமக்கும் பேராசிரியருக்கும் தமிழ் என்ற பொது வெளியை தவிர வேறு எந்த உறவும் இல்லை. இரவு 12.30 அளவிலும் இவ் விவாதத்தில் எம்மை இணைப்பது தமிழ் ஆயின் இனி தமிழ் மெல்ல வளரும்.இவ் விவாதம் தமிழ் கூறும் நல்உலகுக்கு பயன்படும் எனினும் ,நாங்கள் இருவரும் பெருமை பட்டு கொள்ள தமிழராய் பிறந்தோம் என்பதை தவிர ஏதும் ஏதும் இல்லை. நன்றி. ஐயா செந்தில் நாராயணன் எம் விவாத முறைபடுத்துதளில் [Editing ] தவறு இருப்பின் எம்மை மன்னித்து தவறை பழுது நீக்கம் செய்யவும்.

Reference :
தமிழ் அறிக - 16
http://www.perumalmurugan.com/2014/05/16.html

அன்புடன்,
கி.செந்தில் குமரன்