Tuesday, August 5, 2014

"வாழ்த்து" என்ற சொல் பற்றி தமிழ்ப் பேராசிரியர் திரு செந்தில் நாராயணன் அவர்களுடன் ஒரு விவாதம் II Discussion about the word Greet II

தமிழ்ப் பேராசிரியர் திரு செந்தில் நாராயணன் அவர்களுடன் "வாழ்த்து" என்ற சொல் பற்றி ஒரு விவாதம் II

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி : நம் விவாதங்களை தொகுப்பாக்குதல் உங்களுக்கு உடன்பாடு தானே ?

செந்தில் நாராயணன் : தொகுப்பாக்குவதில் எனக்கு எந்தவித மறுப்பும் இல்லை.

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி : ஒருவர் உங்களுக்கு கூறும் "வாழ்த்து" என்பது எண்ணுவதற்கு [is it countable ?]ஏற்றதா ? இல்லையே ? அப்படி எனில் வாழ்த்துக்கள்[கள்] தவறு தானே ? முறுக்குகள் எண்ணபடலாம் . வாழ்த்துகளை எண்ண முடியுமா ஐயா ?

செந்தில் நாராயணன் :1. அவர் தனக்கு வாழ்த்து சொன்ன பலரிலும் ஒருவரைத்தான் விரும்புகிறார். 2. அவர் தனக்கு வந்த வாழ்த்துக்கள் பலவற்றிலும் ஒன்றைத்தான் விரும்புகிறார். இரண்டாவது வாக்கியத்த்ல் உங்களுக்கு உடன்பாடு உள்ளதா?

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி : இரண்டு வாக்கியங்களும் சரி என்று தான் தோன்றுகிறது ஐயா ஆனால் ...," அவர் தனக்கு வந்த வாழ்த்துரைகள் பலவற்றிலும் ஒன்றைத்தான் விரும்புகிறார்" என்று கூறுவது மிக்க சரியாக இருக்குமோ என்று நினைக்கின்றேன்.

பலர் கூறும் போது வாழ்த்துக்கள் என்று கூறுவது சரியாயினும், ஒருவர் கூறும் "என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்" என்ற வாக்கியத்தில் அவ் வாழ்த்துக்களை எண்ண முடியுமா ஐயா ?

ஒருவர் ஒரு வாழ்த்து [வாழ்த்து செய்தி அல்லது வாழ்த்துரை] தானே என் பிறந்த நாளுக்கு கூற முடியும் ?

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி :கண் தெரியாதவருக்கு யானை எப்படி இருக்கும் என்று கண் தெரிந்தவர் விளக்குவது போல எனக்கு நீங்கள் விளக்குவது உள்ளதா ஐயா ?

செந்தில் நாராயணன் :
ஆசான் உரைத்தது அமைவரக் கொளினும்
கால்கூறு அல்லது பற்றலன் ஆகும்
அவ்வினை யாளரொடு பயில்வகை ஒருகால்
செவ்விதின் உரைப்ப அவ்விரு காலும்
மை அறு புலமை மாண்பு உடைத்து ஆகும்
- நன்னூல்
[பொருள் :மாணாக்கர்கள் எவ்வளவு கவனமாக ஆசிரியர் கூறுவதை, சித்திரப்பாவைபோல அமர்ந்து கேட்டாலும், கால் பகுதிதான் மனதில் பதியும். தன்னோடு பாடம் கற்ற மாணவர்களுடன் படித்த பாடத்தைப் பற்றிக் கலந்துரையாடுவதால், மற்றொரு கால்பகுதி மனதில் பதியும்; தான் படித்த பாடத்தை மற்றவர்களுக்கு விளக்குவதால், இன்னொரு அரைப்பகுதி முழுமையாகிப் பாடம் கற்ற பலன் கிடைக்கும்]

செந்தில் நாராயணன் : உங்கள் வினாக்கள் எனக்கு கற்பிக்கும் தன்மையில் உள்ளன.

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி : நன்றி ஐயா !

செந்தில் நாராயணன் : வாழ்த்துரைகள் என்று சொல்வதுதான் பொருத்தமானதாக இருக்கும் என்று இப்போது எனக்குத் தோன்றுகிறது. வாழ்த்துக்கள் என்பது சரியா தவறா என்னும் ஐயத்துடன் உள்ளது. வாழ்த்துரைகள் என்பதில் எந்த குழப்பமும் இல்லை.

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி : மிக்க நன்றி ஐயா !

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி : [1]திரு Giritharan Navaratnam அவர்கள் "வாழ்த்துப்பா" என்னும்போது வாழ்த்து என்பது பெயரடையாக வருகிறது என்று கூறுவது போல், "வாழ்த்துரை" என்னும் போது வாழ்த்து என்பது பெயரடையாக வருகிறதா ஐயா?

[2] வாழ்த்து என்ற சொல் வினைச்சொல் ஆகவும் இருந்து முதல்நிலைத் தொழிலாகுபெயராகவும் வந்து "வாழ்த்துப்பா"வில் பெயரடையாகவும் வரும் எனில்...... "வினை, பெயராகி, பெயரடையாகும் போது பன்மை வாரா" என்று வாழ்த்துக்கு இலக்கணம் எழுதலாமா ஐயா ?

[3]"திருவள்ளுவர் திருக்குறள் முதல் அதிகாரத்தில் கடவுள் வாழுத்து பாடினார்" என்று கூறும் போது வாழ்த்து வினையடையாக தானே வருகின்றது ? அப்படி எனில் ......... "வினை, பெயராகி, வினையடையாகும் போது பன்மை வாரா" என்று வாழ்த்துக்கு இலக்கணம் எழுதலாமா ஐயா ?

[4]பொதுவாக "வினை, பெயராகி, உரியாகும் போது பன்மை வாரா" என்று வாழ்த்துக்கு இலக்கணம் எழுதலாமா ஐயா ?

செந்தில் நாராயணன் :  [1] வாழ்த்துப்பா = வாழ்த்து + பா, ஓட்டப்பந்தயம் = ஓட்ட + பந்தயம் எனச் சொற்களை இரண்டாக பிரித்தல் ஒரு நிலை அவ்வாறு பிரிக்கும் போது முதலில் வரும் சொற்களைப் பெயரடைஆகத்தான் கொள்ள வேண்டிவரும்.

[2]ஆனால் அதே சொற்களை ஒருசொல் நீர்மைத்தாய பண்புத்தொகைச் சொற்களாகவும் கொள்ளலாம். ஏனெனில் அவை தமக்கென தனித்த பொருளைக் கொண்டிருக்கின்றன.

[3]உயரமான பையன் - உயரமான = பெயரடை, பையன் = பெயர்.

[4]ஆனால் வாழ்த்துப்பா, ஓட்டபந்தயம், பொங்கல் சோறு போன்ற சொற்களை உயரமான பையன் போன்ற தன்மையில் பிரித்துப் பார்க்க மனம் ஒப்பவில்லை.

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி :  மனிதர்களின் பண்புகளை தானே உரியாக நாலடியார் ஏற்கின்றார் ? வாழ்த்து ,ஓட்டம் , உயரம் யாவும் மனித பண்புகள் தானே ?

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி : "திருவள்ளுவர் திருக்குறள் முதல் அதிகாரத்தில் கடவுள் வாழுத்து பாடினார்" என்று கூறும் போது வாழ்த்து இங்கு வினையடையாக தானே வருகின்றது ஐயா ?


செந்தில் நாராயணன் :  வாழ்த்து என்னும் வினையடியின் செய்து வாய்பாட்டு வினையெச்சம் வாழ்த்தி என்பதாக அமையும். ‘வாழ்த்திப் பேசினார் என்னும் போது வாழ்த்தி என்பதை மரபிலக்கணப் படி வினையெச்சமாகக் கொள்கிறோம். அதனை வினையடாகக் காட்டினாலும் தவறில்லை. அவர் தன் கவிதையை வாழ்த்தாகப் பாடினார் என்னும் தொடரில் வரும் வாழ்த்தாக (வாழ்த்து + ஆக - ஆக + வினையடை விகுதி ) என்பது வினையடை வடிவத்தில் உள்ளது. வாழ்த்தாக என்னும் வடிவம் வினையெச்சமாகக் கொள்ளப்படுவதில்லை.

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி : பண்புகளுக்கு பன்மை தகாத போது வாழ்த்துக்கு மட்டும் பன்மை தகுமா ஐயா ?

செந்தில் நாராயணன் :  நான் முன்னரே குறிப்பிட்டதற்கிணங்க வாழ்த்தைப் பன்மை ஆக்கியது ஆங்கிலமொழிச்சாயலில்தான். தமிழ்ச்சூழலுக்கு பன்மை வேண்டாத ஒன்றுதான். congratulations, greetings என்றெல்லாம் ஆங்கில மொழியில் காணும் வடிவங்களை நம்மவர்கள் அப்படியே மொழிபெயர்த்து பன்மையாக்கிவிட்டனர்.

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி : மிகவும் நன்றி ஐயா! கற்று அறிந்த தமிழ் அறிஞ்ர்கள் வாழ்த்தின் பன்மை விகுதிக்கு [க்கள்/கள்] விவாதம் செய்யும் போது ,நாம் வயதில் சிறியோர் வாழ்த்துக்கு பன்மை தகா என்று விவாதித்து முடிவு செய்து உள்ளது தான் நம் இளம் தமிழ் சிறப்பு ஐயா !

செந்தில் நாராயணன் :  உரிச்சொற்கள் வெறுமனே பெயரடை, வினையடை மட்டுமல்ல. பொருள் விளங்கிக்கொள்வதில் தடுமாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் சொற்கள் என்று தொல்காப்பியருக்குத் தோன்றிய சொற்கள் அனைத்தும் உரிச்சொல்லாகத் தொல்காப்பியரலால் தேர்வுசெய்யப்பட்டுல்ளன.

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி : உரிச்சொல் என்பது வினைக்கு அல்லது பெயருக்கு முன் வந்து அவற்றின் பான்மையை/பண்பை/இயல்பை குறிக்கும் என்று நான் பொருள் கொண்டு உள்ளது சரி தானே ஐயா ?

செந்தில் நாராயணன் :   ‘மாதர் காதல்’ என்பதாக தொல்காப்பிய உரியியலில் ஒரு நூற்பா உள்ளது. இதில் குறிக்கப்பட்டுள்ள மாதர் என்பது பெண் என்னும் பொருளைத்தரும் இடங்களில் அது உரிச்ச்சொல்லாகக் கொள்ளப்படுவதில்லை. அது காதல் என்னும் பொருள் வரும்படி பயன்படுத்தபடும் இடங்களில்தான் அது உரிச்சொல்லாகக் கொள்ளபைகிறது. இங்கு மாதர் என்பது அதனுடைய அரிதான ஒரு பொருண்மை கருதியே தொல்காப்பியரால் உரிச்சொல்லாகக் கொள்ளப்பட்டுள்ளது. இது போன்ற சொற்கள் வேறு சிலவும் தொல் உரியியலில் உள்ளன. எல்லா உரிச்சொற்களும் பெயரடையாகவோ வினையடையாகவோ இருப்பதில்லை.

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி :  "வினை, பெயராகி, உரியாகும்[ வினையடை,பெயரடை] போது பன்மை வாரா" என்று வாழ்த்துக்கு இலக்கணத்தை நம் அளவில் எழுதி பயன் படுத்துதல் சரி தானே ஐயா ?

செந்தில் நாராயணன் :  எனினும் மொழி என்பது சமூகத்தில் புழங்கும் பொருள். அதனை ஒருசிலர் மட்டுமே நின்று கட்டுப்படுத்த முடியாது. இக்காலத்தில் பலரும் பெரும்பான்மையும் வாழ்த்து என்பதுடன் பன்மை சேர்த்து எழுதியும் பேசியும் வரும் போது. பிற்காலத்தில் ஒருவர் தற்போதைய தமிழுக்கு இலக்கணம் எழுத முற்பட்டால் அவர், ‘வாழ்த்து’ என்னும் பனமையற்ற பொருண்மை 21 ஆம் நூற்றாண்டுத் தமிழில் பன்மை பெற்றுள்ளது எனப் பதிவு செய்வதத் தவிர வேறு வழியில்லை அவருக்கு. வேண்டுமெனில் அப்பதிவை அவர் புறனடையில் அமைத்துக்கொள்ளலாமே தவிர. அதனைப் பதிவு செய்யாமல் விடமுடியாது / விடக்கூடாது.

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி : எதிரில் தமிழ் மீது வரலாறு எழுதபடுவது ஒருபக்கம் இருப்பினும் நிகழில் தமிழ் கற்று அறிந்தவர்களே தவறு செய்யும் போது நாம் கலக்கம் செய்ய வேண்டாமா ஐயா ?

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி :

நம் விவாத ஆய்வு முடிவு :

"வினை, பெயராகி, உரியாகும்[ வினையடை,பெயரடை] போது பன்மை வாரா"

என்று கொள்ளுதல் சரி தானே ஐயா ?

செந்தில் நாராயணன் :  வினையடை, பெயரைடை ஆகியவற்றில் பன்மை வாரா.

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி : வாழ்த்து என்ற வினைச்சொல் ,முதல்நிலைத் தொழிலாகுபெயராகி , வினையடை, பெயரைடை யாகவும் காட்சி அளிப்பதால்.....
"வினை, பெயராகி, உரியாகும்[ வினையடை,பெயரடை] போது பன்மை வாரா" என்று கொள்ளுதல் சரி தானே ஐயா ?

செந்தில் நாராயணன் : வேறு யாரேனும் தக்க விதத்தில் இக்கருத்தை மறுக்கும் வரை இதனை ஏற்றுக்கொள்வோம்.

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி : நாளை நம் தமிழரின் பழமையான இசை கருவியான "பறை" மீது விவாதம் செய்யலாமா ஐயா ? தமிழை ஆய்வதால் உறக்கம் வரவில்லையா ஐயா ?

செந்தில் நாராயணன் : நாளைய வகுப்பிறகான தயாரிப்பில் இருக்கிறேன். குழந்தை உறங்கச் சென்றபிந்தான் இந்த வேலையைப் பார்க்க முடிகிறது. பறை பற்றி அதிகம் படித்ததில்லை. புதிய தகவல்கள் இருந்தால் பகிரவும். நன்றியுடயவனாவேன்

 செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி :  "பறை" பற்றி நாளை பேசுவோமா ஐயா ? மிக்க நன்றி ஐயா . மீண்டும் நாளை சிந்திப்போம்.

 தொடர்புடைய பதிவு :

  http://www.vansunsen.blogspot.in/2014/08/discussion-about-word-greet.html

Reference :
தமிழ் அறிக - 16
http://www.perumalmurugan.com/2014/05/16.html
அன்புடன்,
கி.செந்தில் குமரன்