பெருமாள்முருகன்
உரையாடியவர் :
க.காமராசன்
பெருமாள்முருகன் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் கூட்டப் பள்ளியில் பிறந்தவர். தமிழ் வட்டார நாவலின் முன்னோடியாகிய எழுத்தாளர் ஆர்.சண்முகசுந்தரம் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றுகின்றார். இவர் பெற்றோர் பெருமாள், பெருமாயி. தன் தந்தையின் பெயரைத் தன் பெயரோடு இணைத்து “பெருமாள் முருகன்” என்னும் பெயரில் கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை ஆகியவற்றை எழுதிவருகிறார். காலச்சுவடு இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவர். மனஓசை, குதிரை வீரன் பயணம் ஆகிய இதழ்களின் ஆசிரியர் குழுவில் பணியாற்றி உள்ளார். ஐந்து நாவல்கள், மூன்று சிறுகதைத் தொகுப்புகள், மூன்று கவிதைத் தொகுப்புகள் இவருடைய புனைவு எழுத்துகள். கொங்கு வட்டாரச் சொல்லகராதியைத் தொகுத்துள்ளார். இவர் எழுதிய மூன்று கட்டுரைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. ‘பதிப்புகளும் மறுபதிப்புகளும்’ என்ற கட்டுரைத் தொகுப்பு வெளிவர உள்ளது. இரண்டு நூல்களைப் பதிப்பித்துள்ளார். இவரது இரண்டு நாவல்களை வ.கீதா ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
உங்களுடைய இல்புனைவு(non-fiction) எழுத்துகள் பற்றிப் பேசுவோம். எந்தெந்தப் புலமைத் துறைகளில் கவனம் செலுத்தி வருகின்றீர்கள்?
நான் ஆரம்ப காலங்களில் பல துறைகளிலும் எழுதி வந்தேன். ஆனால், இப்போது புனைவு சாராத எழுத்துத் துறைகளை வரையறைப்படுத்தி வைத்துள்ளேன். பொது வாக அகராதி, குறிப்பாக வட்டார வழக்கு அகராதி பற்றி எழுதி வருகின்றேன். நாட்டுப்புறவியலில், குறிப்பாகக் கொங்கு வட்டார நாட்டுப்புறவியல் சார்ந்து அண்ணன் மார் சாமி கதைப்பாடல் பற்றிச் சில கட்டுரைகள் எழுதி யுள்ளேன். அப்புறம் பழைய இலக்கியங்களின் பதிப்பு பற்றிக் கவனம் செலுத்துகிறேன். இந்த மூன்று துறைகளே எனது புனைவுசாராத புலமைத் துறைகள். மேலும் அனுபவக் கட்டுரைகள், நவீன புனைவு இலக்கியம் சார்ந்த விமர்சனக் கட்டுரைகள் ஆகியவையும் எழுதுகிறேன்.
நீங்கள் கொங்கு வட்டார வழக்கு அகராதியைத் தொகுத்துள்ளீர்கள். இத்தொகுத்தல் பணியில் உங்களுக்குக் கிட்டிய அனுபவங்கள் யாவை?
கி.ரா.வுடைய அகராதி, அதற்கப்புறம் வெளிவந்திருக்கும் இரண்டு சிறிய அகராதிகளுக்குப் பிறகு என்னுடைய வட்டார வழக்கு அகராதிதான் ஒரு முக்கியமான அகராதி. நான் இந்த அகராதியைத் தொகுக்கும் சமயத்தில் எனக்கு ஒரு முன்மாதிரி எதுவும் இல்லை. கி.ரா.வுடையது அகராதியியல் நெறிமுறைகள்படி அமைந்த அகராதி என்று சொல்ல முடியாது. அவர் ஒரு படைப்பாளியென்ற காரணத்தினால், சொல்லுக்குப் பொருள் கூறும்போது ஒரு கலைக்களஞ்சிய விளக்கம்போல எழுதியிருப்பார். என்னுடைய அகராதியில் சொல்லுக்குப் பொருள் கூறும் போது அகராதியியல் நெறிமுறைகளைப் பின்பற்ற முயன்றுள்ளேன். கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதியை மாதிரியாக வைத்துக்கொண்டு கொங்கு வட்டார வழக்கு அகராதியைத் தொகுத்துள்ளேன். தலைச்சொல், அதற்கு இலக்கணக் குறிப்பு, அப்புறம் பொருள், சான்று வாக்கியம் என்ற முறையில் அமைத்துள்ளேன். இதுவரைக்கும் வெளிவந்திருக்கின்ற வட்டார வழக்கு அகராதிகளில் இந்த மாதிரி அகராதியியல் நெறிமுறைகளைப் பின்பற்றி வெளிவந்திருக்கின்ற அகராதி என்னுடையது மட்டுமே. என்னுடைய அகராதிக்குப் பிறகு வெளிவந்திருக்கின்ற வட்டார வழக்கு அகராதிகளில்கூட இந்த அகராதியியல் நெறிமுறைகள் பின்பற்றப்படவில்லை. வட்டார வழக்கு அகராதிகளைத் தொகுக்கின்றவர்கள் படைப்பாளி களாகவும், அகராதியியல் நெறிமுறைகள்பற்றி அறியாதவர் களாகவும் இருக்கின்றார்கள். அதனால் அவர்கள் யாருமே இலக்கணக்குறிப்பு, சான்று வாக்கியம் கொடுப்பதை யெல்லாம் செய்வதில்லை.
சொற்களைத் தொகுப்பதற்குச் சில முறைகளைப் பின்பற்றினேன். அவற்றில் முக்கியமானது களஆய்வுமுறை தான். களஆய்வுமுறை என்று சொல்லும்போது, அதற்காகத் தனியாக நேரம் ஒதுக்கி எதுவும் திட்டமிடவில்லை. நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன். கல்லூரியில் படிக்கும் காலத்திலிருந்தே இந்தச் சொற்களைத் தொகுத்துக் கொண்டிருந்தேன். நான் எப்போதும் ஒரு துண்டுச்சீட்டு அல்லது நோட்டு வைத்திருப்பேன். யாராவது புதிதாக ஒரு சொல்லைப் பேசும் போது கேட்டால் உடனே குறித்து வைத்துக்கொள்வேன். அதற்குப் பிறகு வீட்டிற்கு வந்து வீட்டில் சொற்களை எழுதி வைத்திருக்கும் டைரியில் அந்தச் சொல்லையும், அதற்குரிய பொருளையும் எழுதி வைத்துக்கொள்வேன். இப்படித்தான் நிறைய சொற் களைத் தொகுத்தேன். பிறகு ஆர்.சண்முகசுந்தரத்தின் நாவல்கள் போன்றவற்றிலிருந்து கொஞ்சம் சொற்களை எடுத்துக் கொண்டேன். ஆனால் வட்டார நாவல் போன்ற எழுத்துச் சான்றுகளிலிருந்து சொற்களைத் திரட்டும் பணியை நானும் முறையாகச் செய்யவில்லை.
இன்று வட்டார நாவல்கள் வட்டார வழக்குச் சொற்களுக்குப் பெரிய ஆதாரக் கிடங்காக உள்ளது. இந்த நாவல்களிலிருந்து வட்டார வழக்குச் சொற்களை எடுத்துக் கொண்டு, அச்சொற்களுக்கு அவற்றிலிருந்தே சான்று வாக்கியம் கொடுக்கலாம். அப்படிச் செய்யும்போது அந்த அகராதி நம்பகத்தன்மை பெற்றுவிடும். களஆய்விலிருந்து சொல்லை எடுத்து, அதற்கு உதாரணம் கொடுக்கும்போது எனக்குத் தெரிந்த சான்று வாக்கியத்தைக் கொடுக்கிறேன். அப்போது வெளியிலிருக்கின்றவர்கள் நான் கொடுப்பது சரியா, தவறா, அப்படித்தான் வழங்கப்படுகின்றதா என்று மதிப்பிட முடியாது. ஆனால் வட்டார நாவல்களிலிருந்து எடுக்கும்போது அந்தப் பிரச்சினை எழுவதில்லை. இவற்றையெல்லாம் செய்துதான் கொங்கு வட்டார வழக்கு அகராதியின் இரண்டாம் பதிப்பைக் கொண்டுவர உள்ளேன். அதனாலேயே கால தாமதமும் அதிகமாகின்றது.
வட்டாரம் சார்ந்த சொல் என்று ஒரு சொல்லை எப்படி அடையாளப்படுத்த முடியும்? வரையறுக்க முடியும்?
இதில் நிறைய சிரமங்கள் இருக்கின்றன. எல்லா வட்டாரங்களுக்கான அகராதிகள் வெளிவந்த பிறகு சொற்களை ஒப்பிட்டுப் பார்த்த பின்பே ஒரு சொல் இந்த வட்டாரத்திற்கே உரியது என்று உறுதிப்படுத்த முடியும். அதற்கு முன்பு நம்மால் அவ்வளவு உறுதியாக ஒரு சொல் இந்த வட்டாரத்திற்கு மட்டுமே உரியது என்று சொல்லிவிட முடியாது. இப்போது வெளிவந்திருக்கின்ற வட்டார அகராதிகளை எடுத்துப்பார்த்தோம் என்றால் நிறைய பொதுச்சொற்கள், வேறு வட்டாரங்களிலிருக்கின்ற சொற்கள் எல்லாம் கலந்துதான் இருக்கின்றன. இதனைத் தவிர்க்க முடியாது. காரணம் வட்டார வழக்கு அகராதி தொகுக்கும் ஒருவர் எல்லா வட்டாரங்களுக்கும் சென்று தொகுத்து, ஒப்பிட்டுப் பார்த்துச் செய்ய முடியாது. அகராதிப் பணி என்பது ஒரு பெரும் பணி. அதைப் பல பேர் செய்ய வேண்டும்; ஒரு நிறுவனம் செய்ய வேண்டும். இப்படி இருக்கும்போது ஒரு தனிநபர் ஆர்வத்தினால் செய்வது நிறுவனம் செய்யக்கூடிய அளவுக்கு இருக்க முடியாது.
ஒரு சொல் வட்டாரச் சொல் என்பதற்குச் சில வரையறைகளைச் சொல்ல முடியும். ஒரு வட்டாரத்தில் மட்டுமே வழங்கக்கூடிய சொற்கள் சில இருக்கின்றன. நில அமைப்பிற்கேற்ற மாதிரி ஒரு பகுதி மக்களுடைய வாழ்க்கை முறை இருக்கும். அதனால் ஒரு சில சொற்கள் அந்த மக்களிடையே மட்டும் வழக்கிலிருக்கும். அந்த மாதிரியான சொற்களைத் தெளிவாக வட்டார வழக்கு என்று சொல்ல முடியும். உதாரணமாக இந்தப் பகுதியில் ‘இட்டேரி’ என்ற சொல் இருக்கின்றது. இந்தச் சொல் வேறு எந்த வட்டாரத்திலும் இல்லை. அதனை நான்
சரிபார்த்து விட்டேன். வேறு எங்கும் அச்சொல் வழங்கப்படவில்லை. அந்தச் சொல் ஏன் இந்தப் பகுதியில் மட்டும் இருக்கிறது என்றால் ‘இட்டேரி’ என்னும் அமைப்பு இந்தப் பகுதியில் மட்டுமே இருக்கின்றது. அதனால் இந்த மாதிரி இருக்கக்கூடிய சொற்களை எல்லாம் ஒரு குறிப்பிட்ட வட்டாரத்திற்கே உரியவை என்று தெளிவாக வரையறுத்துக் கொள்ள முடியும்.
இன்னும் சில சொற்கள் பொதுச்சொற்களாக இருக்கும். ஆனால் வட்டாரப் பொருள் வேறானதாக இருக்கும். உதாரணமாகத் தொண்டு என்னும் சொல் இருக்கின்றது. இந்தச் சொல் பொதுவழக்கில் சேவை என்னும் பொருளைத் தரக்கூடியது. ஆனால் கொங்கு வட்டாரத்தில் இந்தச் சொல் மோசமான நடத்தையுடைய ஓர் ஆணையோ, ஒரு பெண்ணையோ குறிக்கக்கூடிய வசைச் சொல். இது பொதுச்சொல்தான். ஆனால் வட்டாரப் பொருள் வேறானதாக இருக்கின்றது. இப்படி இருக்கக்கூடிய சொற்களையும் வட்டாரச் சொற்கள் என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.
இன்னும் சில சொற்கள் பொதுச்சொற்களாக இருக்கும். ஆனால் வட்டாரப் பேச்சு வழக்கில் திரிபடைந்து வேறு உருபெற்று இருக்கும். அந்தச் சொற்களைக் கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதல்ல. கொஞ்சம் முயன்றால் அந்தச் சொற்களைக் கண்டுபிடிக்க முடியும். கொங்கு வட்டார வழக்கில் ‘விருமத்தி’ அல்லது ‘விருமித்தி’ என்ற சொல் இருக்கின்றது. இந்தச் சொல் ‘பிரமஹத்தி’ என்ற சொல்லின் திரிபென்று கருதுகிறேன். பேயறைந்தவன் மாதிரி ஒரு ஆள் இருக்கிறான் என்றால் அவனை விருமத்தி பிடிச்ச மாதிரி இருக்கிறான் என்று சொல்வார்கள். இந்த மாதிரி சொற்களையும் வட்டாரச் சொற்களாகக் கருத வேண்டும். ஏனென்றால் அந்த மாதிரி சொற்களின் வடிவமே மாறிவிடுகின்றது.
ஏற்கனவே வெளிவந்திருக்கின்ற தமிழ் அகராதிகளில் வட்டார வழக்குச் சொற்களை எப்படிப் பதிவு செய்திருக்கின்றார்கள்? குறிப்பாகச் சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரகராதி, கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி ஆகியவற்றில் எவ்வாறு பதிவு செய்திருக்கின்றார்கள்?
மிகப் பெரும்பாலான தமிழ் அகராதிகள் வட்டார வழக்கு பற்றி எந்தவிதக் கவனமும் இல்லாத அகராதி களாகவே இருக்கின்றன. 19ஆம் நூற்றாண்டு 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் வெளிவந்த அகராதிகளில் வட்டார வழக்கு பற்றி எந்தவித உணர்வும் இல்லை. மதுரைத் தமிழ்ப் பேரகராதியில் இறுதியாக இந்த மொழியில் கலந்துவிட்ட பிறமொழிச் சொற்கள், திசைச் சொற்கள், கொச்சைச் சொற்கள், பேச்சு வழக்குச் சொற்கள் என்று பின்னிணைப்பாகத் தரும் பகுதியில்தான் வட்டார வழக்கிற்கு இடம் ஒதுக்கியிருக்கின்றனர். இந்த வட்டார வழக்குச் சொற்களுக்கு முதலில் ஒரு மதிப்பைக் கொடுத்தவர் வையாபுரிப்பிள்ளைதான். அவர் தமிழ்ப் பேரகராதியின் பதிப்பாசிரியராக இருந்ததால், ஆங்கிலத்தில் வந்திருந்த அகராதி பற்றிய நூல்களையெல்லாம் படித்து ஒரு மொழியில் சொல் வளம் எவ்வளவு முக்கியம், அச்சொல் வளத்தை எங்கிருந்தெல்லாம் திரட்ட வேண்டும் என்பதுபற்றிக் கருத்துக் கொண்டிருந்தார். அதனால் வட்டார வழக்கிற்கு முக்கியத்துவம் கொடுத்தார். அவர் அந்தக் காலத்தில் இருந்த ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு பிரதிநிதியை நியமித்து, அந்தப் பகுதியில் இருக்கும் சொற்களைத் திரட்டித்தரக் கேட்டிருக்கிறார். அப்படி நியமிக்கப்பட்ட ஆட்களில் சிலர் நன்றாகச் செயல் பட்டிருக்கின்றனர்; சிலர் நன்றாகச் செயல்படவில்லை. அதனால் எந்தப் பகுதியில் சிறப்பாகச் செயல்பட்டார் களோ அந்தப் பகுதியின் சொற்கள் பேரகராதியில் அதிகமாகப் பதிவாகியிருக்கின்றன; சிறப்பாகச் செயல் படாத பகுதியின் சொற்கள் பதிவாகவில்லை. உதாரணமாக நாஞ்சில் நாட்டுப் பகுதிக்கு கவிமணி பிரதிநிதியாக இருந்தார். வையாபுரிப்பிள்ளையே நாஞ்சில் நாட்டுக்காரர். கவிமணியும் சிறப்பாகச் செயல்பட்டு ஏராளமான சொற்களைத் திரட்டித் தந்திருக்கிறார். அதனால் நாஞ்சில் நாட்டு வட்டார வழக்குச் சொற்கள் அதிகமாகப் பதிவாகி இருக்கின்றன. அதே வேளையில் சேலம் பகுதியின் சொற்கள் அதிகமாகப் பதிவாகி இருக்காது. அதற்குக் காரணம் என்னவென்றால் சேலம் பிரதிநிதியாக விஜய ராகவாச்சாரியர் இருந்தார். அவருக்கு மக்களுடனான தொடர்பு, வட்டார வழக்குச் சொற்கள் மீதான ஆர்வம் இருந்ததாகத் தெரியவில்லை. இருந்தாலும் ஒப்பீட்டளவில் அதிகமான வட்டார வழக்குச் சொற்களைப் பதிவு செய்திருக்கும் அகராதி தமிழ்ப் பேரகராதிதான். அதற்குக் காரணம் வையாபுரிப்பிள்ளைதான்.
கிரியா அகராதியில் குறைவாகவே வட்டார வழக்குச் சொற்கள் பதிவாகி இருக்கின்றன. கிரியாவில் வ.வ. என்ற சுருக்கக் குறியீடு கொடுத்தே வட்டார வழக்குச் சொற் களைப் பதிவு செய்திருக்கின்றார்கள்; வட்டார நாவல் முதலான படைப்புகளிலிருந்து சொற்களை எடுத்துப் பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் சொற்களைத் தேர்வு செய்வதற்கு என்ன மாதிரியான வரையறை வைத்திருக்கிறார்கள் என்பது பற்றியும் சொல்லவில்லை. ஆனால் வட்டார நாவல் முதலானவற்றிலிருந்து முழுமையாகச் சொற்களைத் திரட்டவில்லை. அதற்கான காரணம் நமக்குத் தெரியவில்லை.
பழைய இலக்கியங்களில் வட்டார வழக்குச் சொற்களைக் கண்டறிய முடியுமா?
இன்று சில சொற்களை வட்டார வழக்குச் சொற்கள் என்று சொல்ல முடிகிறது. அவை அந்தக் காலத்தில் வட்டார வழக்குகளாக இருந்தனவா என்பது பற்றி ஒன்றும் சொல்ல முடியவில்லை. ஆனால் ஒரு மாதிரியான பிரிவுகள் இருந் திருக்கின்றன. உரையாசிரியர்கள் செந்தமிழ், கொடுந்தமிழ் என்று பிரிக்கின்றார்கள். இந்தக் கொடுந்தமிழ் வட்டார வழக்காக இருந்திருக்கலாம். அப்புறம் திசைச் சொல் என்று குறிக்கக்கூடியது வட்டார வழக்குச் சொல். அதற்கு நன்னூலின் உரை ‘அருவா நாட்டார் எருமையைப் பெற்றம் என்பார்’ என்று உதாரணம் கொடுக்கும். இந்த மாதிரியான எடுத்துக்காட்டுகளிலிருந்து ஒரு சில வட்டாரச் சொற் களைக் கண்டறிய முடிகிறது. தொல்காப்பியத்திலும் ஒன்றிரண்டு சொற்களைக் கண்டறிய முடியும். தொல் காப்பிய மரபியல் இளமைப் பெயர்கள், ஆண்பால் பெயர்கள், பெண்பால் பெயர்கள் ஆகியவற்றைத் தொகுக்கும் போது உலக வழக்கையும் அளவுகோலாகக் கொள்கிறது. இளமைப் பெயர்களைக் குறிப்பதற்குப் பல சொற்கள் தரப்பட்டிருக்கின்றன. அச்சொற்கள் பல வட்டாரப் பகுதிகளிலிருந்தும் எடுக்கப்பட்டிருக்கலாம். இதைப் பற்றி நானும் இளவரசும் சில கட்டுரைகள் எழுதியிருக்கின்றோம். “மூடும் கடமையும் யாடல பெறாஅ” (தொல்.பொருள்.மரபு.63) என்றொரு நூற்பா இருக்கின்றது. மூடும், கடமையும் ஆட்டின் இளமைப் பெயர்கள் என்பது இந்த நூற்பாவின் பொருள். இந்நூற்பாவிற்குப் பேராசிரியர் உரையெழுதும்போது, “மூடு என்ற சொல் இக்காலத்து வழக்கிறந்தது போலும்” என்று எழுதுவார். அவருடைய காலம் பத்து நூற்றாண்டு களுக்கு முன்பு என்று கணக்கிட்டால்கூட, அக்காலத் திலேயே ‘மூடு’ என்ற சொல் வழக்கிறந்துவிட்டது. ஆனால் இந்தச் சொல் இன்னும் கொங்கு வட்டாரப் பகுதியில் வழக்கில் இருக்கின்றது. இங்கு ஆட்டின் பெண் குட்டியை மூட்டுக்குட்டி என்று சொல்லும் வழக்கம் இன்றும் இருக்கின்றது. இப்படி நாம் தேடினால் பழைய இலக்கியங் களில் வட்டார வழக்குச் சொற்களைக் கண்டறிய முடியும்
.
வட்டார வழக்கு அகராதிகள் எதற்குத் தேவைப் படுகின்றன? அவற்றின் முக்கியத்துவம் என்ன?
உண்மையில் தமிழில் பெரிய அளவுக்குச் சொல் வளம் இருக்கக்கூடிய பகுதி இந்த வட்டார வழக்கு. இதை இன்று நாம் தொகுக்காமல் விட்டுவிட்டால் இந்தச் சொல் வளம் அழிந்து போய்விடும். இதை இன்று தொகுக்கின்ற தன் மூலமாகத் தமிழ் அகராதியில் ஏராளமான சொற் களைச் சேர்க்க முடியும். சொற்களை அதிக அளவில் சேர்த்து அகராதியைப் பெரியது பண்ணுவது மட்டும் நம் நோக்கமன்று. வட்டார வழக்குச் சொற்களிலிருந்து நிறைய சொற்களைப் பொதுவழக்கிற்குக் கொண்டுவர முடியும். அதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ப.ரா.சுப்பிரமணியன் ‘சொல்வலை வேட்டுவன்’ என்றொரு கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியிட்டிருக்கிறார். அந்நூலில் எப்படி வட்டார வழக்குச் சொற்களைப் பொதுவழக்கிற்குக் கொண்டு வரலாம் என்பதுபற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் வேற்று மொழிச் சொற்களுக்குத் தமிழ்ப் பொது வழக்கில் சொற்கள் இல்லையென்றால் வட்டார வழக்கிலிருந்து எடுத்துப் பயன்படுத்தலாம் என்று கூறுகிறார். வட்டார வழக்கிலிருந்து சொற்களை எடுப்பதற்குச் சில வரையறைகளை, விதிமுறைகளை வைக்கின்றார். கொங்கு வட்டாரச் சொற்கள் சிலவற்றை எப்படிப் பொதுவழக்கிற்குக் கொண்டுவர முடியும் என்பது பற்றியும் அக்கட்டுரையில் கூறியுள்ளார். அப்படிச் செய்யும் போது கலைச்சொற்களுக்குக்கூட வட்டார வழக்குச் சொற்கள் உதவும்; பயன்படுத்த முடியும்.
நஞ்சுண்டன் கன்னடத்திலிருந்து நாவல்கள், சிறுகதைகளை மொழிபெயர்க்கும்போது தேவைப் படுகின்ற இடத்தில் பொது வழக்குச் சொற்கள் இல்லை யென்றால் வட்டார வழக்குச் சொற்களைப் பயன்படுத்து கின்றார். தேவைப்படுகின்ற இடத்தில் பொதுவழக்குச் சொற்கள் இல்லாத போது வட்டார வழக்குச் சொற்களைப் பயன்படுத்த வேண்டும். இவையும் தமிழ்ச் சொற்கள்தானே. வட்டார வழக்குச் சொற்கள் என்பதற்காக ஒதுக்க வேண்டிய அவசியமேதுமில்லை. நான் வழக்கமாக ஓர் உதாரணம் சொல்வேன். இந்தப் பகுதியில் ‘முசுவு’ என்றொரு சொல் இருக்கின்றது. இந்தச் சொல் ஆங்கிலத்தில் ‘BUSY’ என்ற சொல்லைக் குறிக்கக் கூடியது. இந்த ‘BUSY'-க்குத் தமிழ்ப் பொதுவழக்கில் சரியான சொற்களேதும் இல்லை. இந்த ‘முசுவு’-ஐ, நாம் பொதுவழக்கிற்குக் கொண்டு வரலாம். ‘வேலை முசுவா இருக்கிறான்’ என்பது மாதிரி இந்தப் பகுதி பேச்சு வழக்கில் வருகின்றது.
தமிழ் ஓர் இரட்டை வழக்கு மொழி; பேச்சு வழக்கு வேறானதாகவும், எழுத்து வழக்கு வேறானதாகவும் இருக்கக்கூடிய மொழி. சொற்கள் எப்படியெல்லாம் பேச்சு வழக்கில் திரிபடைகின்றன என்பதை மொழியியல் அடிப்படையில் ஆய்வு செய்வதற்கு வட்டார வழக்கு அகராதி மிகப் பெரிய ஆதாரமாக இருக்கும். மொழியியல் ஆய்வு மட்டுமல்ல, சமூகவியல் ஆய்வுகளும் செய்ய முடியும்; செய்ய வேண்டும். வட்டார வழக்குச் சொற்கள் உருவாவதற்கு நிலஅமைப்பு முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். நிலஅமைப்பு அடிப்படையில்தான் மக்களுடைய வாழ்முறை அமைகின்றது. அதனால் நில அமைப்பு அடிப்படையில் கொங்கு வட்டாரத்திற் குள்ளேயே பேச்சு வழக்குச் சொற்களில் வேறுபாடுகளைக் காண முடியும். சாதிகள் ஒன்றாக இருந்தாலும் மேட்டுக் காட்டுப் பகுதியில் ஒரு மாதிரியாகவும், வயக்காட்டுப் பகுதியில் வேறு மாதிரியாகவும் சொற்கள் வழங்குகின்றன. பொள்ளாச்சிப் பகுதியிலிருந்து ஒரு நண்பர் எனக்குச் சொற்களைச் சேகரித்துக் கொடுத்தார். அப்பகுதி முழுக்க முழுக்க வாய்க்கால் பாசனப் பகுதி. அந்தப் பகுதிச் சொற்கள் நான் அறியாதவையாக, வித்தியாசமானவையாக இருந்தன. எங்கள் பகுதி மேட்டுக்காடு; பாசன வசதியற்றது. இந்தப் பகுதியில் நான் சேகரித்த சொற்கள் அவர் அறியாதவையாக, அவருக்கு வித்தியாசமானவையாக இருந்தன. நிலஅமைப்பு வேறுபடும்போது சொற்களும் மாறுபடுகின்றன.
கொங்கு வட்டார வழக்குச்சொல் அகராதி தொகுத் தலிலிருந்துதான் உங்களுக்குக் கொங்கு வட்டார நாட்டுப்புறவியல் ஆய்வு மீதான ஆர்வம் ஏற்பட்டதா?
அப்படியும் சொல்லமுடியும். நான் கல்லூரியில் நாட்டுப் புறவியல் பாடம் படித்தபோதுதான் இந்த வட்டார வழக்கு அகராதி பற்றிய ஆர்வம் தோன்றியது. பிறகு பாடல், பழமொழி, விடுகதை உள்ளிட்ட எல்லாவற்றிலுமே கவனம் செலுத்த ஆரம்பித்தேன். நான் பல்கலைக்கழகத்தில் நாட்டுப்புறவியல் பட்டயச் சான்றிதழ் படிப்பும் படித்தேன். நாட்டுப்புறவியல் சார்ந்த எல்லாவற்றிலும் ஆர்வம் இருந்தாலும்கூட ஒன்றிரண்டு விசயங்களில் மட்டும் கவனம் செலுத்த விரும்புகிறேன். குறிப்பாக இந்தப் பகுதியின் கதைப்பாடலான அண்ணன்மார் சாமி கதைப் பாடல் பற்றிக் கவனம் செலுத்துகிறேன். இந்தக் கதைப் பாடல் பற்றி நிறைய பேர் எழுதியிருக்கிறார்கள். அவ்வாறு எழுதியவர்களில் பெரும்பாலருடைய பார்வை சாதி அபிமானம் உடையதாக இருக்கின்றது என்பது எனது கருத்து. சாதி அபிமானம் இல்லாமல் பார்த்தவர்கள் மிகக் குறைவே. பிரந்தா பெக் என்ற ஆய்வாளர் வெளிநாட்ட வராக இருந்ததால் சில விசயங்களை வெளிப்படையாகப் பேசியுள்ளார். இந்தப் பகுதியிலிருக்கும் ஆய்வாளர்கள் சாதி அபிமானத்தைக் கடந்து பார்க்கவில்லை. சாதி அபிமானத்தை விட்டுவிட்டு இந்தக் கதைப் பாடலை ஆய்வு செய்ய வேண்டும் என்பதே என் விருப்பம்.
தமிழகக் கதைப்பாடல்களில் அண்ணன்மார்
சாமி கதைப்பாடல் ரொம்பரொம்ப வித்தியாசமானது. கோ. கேசவன்கூட அவருடைய கதைப்பாடல் ஆய்வில் இந்தக் கதைப்பாடலை விட்டிருப்பார். காரணம் என்ன வென்றால் பொதுப்போக்கிற்குள் இந்தக் கதைப்பாடலைக் கொண்டுவர முடியாது; இந்தக் கதைப்பாடல் தனித்தன்மை மிக்கது. இந்தக் கதைப்பாடலுக்குள் பல வரலாற்று நிகழ்வுகள் புதைந்து கிடக்கின்றன. அதனால் மிக ஆழமாகவும், பல கோட்பாடுகள் அடிப்படையிலும் ஆய்வு மேற்கொள்ள வேண்டிய தேவை இருக்கின்றது. அதனால் இந்த அடிப்படையில் தொடர்ந்து அக்கதைப்பாடல் மீது கவனம் செலுத்தி வருகின்றேன். சில கட்டுரைகளும் எழுதியிருக்கின்றேன்.
இந்தப் பகுதியின் சடங்குகள் பற்றியும் எனக்கு ஆர்வம் இருக்கின்றது. சடங்குகள் பற்றிய விவரங்களைத் தொகுத்துக் கொண்டும், நாட்டுப்புறவியல், மானிடவியல் கோட்பாடுகளைப் படித்துக் கொண்டும் இருக்கின்றேன். இதைப் பற்றி இன்னும் நான் எதுவும் எழுதவில்லை. ஆனால் எழுத வேண்டும்.
அண்ணன்மார் சாமி கதைப்பாடலுக்குப் பல்வேறு பனுவல்கள் (VERSONS) இருக்கின்றன. அவற்றையெல்லாம் எப்படிப் பார்க்க வேண்டும்?
அச்சில் வந்திருக்கின்ற பிரதிகளில் மிக முக்கியமானது சக்திகனல் பதிப்பித்த ‘அண்ணன்மார் சுவாமி கதை’. சக்திகனல் தான் பதிப்பித்தற்கு அடிப்படையாக இருந்த ஏடு பற்றி ஒன்றும் சொல்லவில்லை. அவர் ஏதோ ஒரு ஏட்டை அடிப்படையாக வைத்திருக்க வேண்டும். அவர் கதைப் பாடலில் நிறைய திருத்தங்கள் செய்து பதிப்பித்து இருக்கின்றார் என்று சொல்லுவார்கள். ‘அண்ணன்மார் சுவாமி கதை’ என்ற தலைப்பிலேயே சிக்கல் இருக்கின்றது. இங்கு ‘அண்ணன்மார் சுவாமி கதை’ என்று சொல்ல மாட்டார்கள். ‘குன்னுடையான் கதை’ என்றே மக்கள் சொல்லுகின்றனர். மக்கள் வழக்கில் இருக்கின்ற கதைக்கும் அச்சில் வந்திருக்கின்ற பிரதிகளுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. மக்கள் வழக்கில் உள்ள உடுக்கையடிக் கதைப்பாடல்களில் அண்ணன்மார் என்று சொல்லப் படுகிற பொன்னர் - சங்கர் ஆகியோரின் பெற்றோர்களான குன்னுடையான் - தாமரை ஆகியோரின் கதையே பெரும் பகுதி. ஆனால் அச்சில் வந்திருக்கின்றவற்றில் எல்லாம் பொன்னர் - சங்கர் கதை பெரும்பகுதியாக உள்ளது; குன்னுடையான் தாமரை கதை சிறுபகுதியாக உள்ளது. அதனால் மக்கள் வழக்கில் உள்ள கதைக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
இந்தக் கதைப்பாடலுக்கு மக்கள் வழக்கிலும் மூன்று வடிவங்கள் இருக்கின்றன. உடுக்கையடிக் கதைப்பாடலாக இருக்கின்றது. பத்து - பதினைந்து நாட்கள் நடை பெறுகின்ற உடுக்கையடிப் பாடலும், கூத்தும் கலந்த வடிவம் மற்றொன்று. இன்னொன்று முழுக்க கூத்து வடிவமாக இருக்கின்றது. இந்தக் கூத்து ஒரு நாளுக்குள் நடத்தி முடிக்கும்படியான வடிவமாகவும் வைத்திருக் கின்றனர். இந்த மூன்று வடிவங்களைப் பதிவு செய்து, இவற்றை ஆய்விற்கான ஆதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.
அச்சில் வந்திருப்பவற்றில் சக்திகனல் பதிப்பு தவிர, பெரிய எழுத்து கள்ளழகர் அம்மானை இருக்கின்றது. இதை இரத்தின நாயக்கர் அன்ட் சன்ஸ் வெளியிட்டிருக் கிறார்கள். இதுவும் இல்லாமல் அச்சில் வந்த வேறு சில பிரதிகளும் இருக்கின்றன. அப்புறம் பிரந்தா பெக் எருசலம்பட்டி இராமசாமி என்பவரிடம் பதிவு செய்த ஒன்று இருக்கின்றது. அது பாட்டும் கதைச்சொல்லலும் கலந்து வரும். இதை ஆசியவியல் நிறுவனம் அவருடைய ஆங்கில மொழிபெயர்ப்புடன் வெளியிட்டிருக்கின்றது. இவற்றையெல்லாம் வைத்துக்கொண்டுதான் பார்க்க வேண்டும்.
இந்தக் கதைப்பாடல் பற்றி இன்று எழுத்துத் துறையிலும், திரைப்படத் துறையிலும் சித்திரிக்கும்போது வெறும் பங்காளி சண்டை என்று சித்திரிக்கின்றார்கள். இந்தச் சித்திரிப்பு சாதிகளைப் பகைத்துக் கொள்ளக் கூடாது என்ற இன்றிருக்கக்கூடிய தேவையை ஒட்டியதாக இருக்கலாம். ஆனால் இந்தக் கதைப்பாடல் இரண்டு சாதி களுக்கு இடையிலான போராட்டம். சாதிகளுக்கிடை யிலான போராட்டம் என்பதைவிட இந்தப் பகுதியில் பூர்வக்குடிகளாக இருந்த வேட்டுவர்களுக்கும், வேறு பகுதியிலிருந்து வேளாண் தொழில்நுட்ப அறிவுடன் வந்த வேளாளர்களுக்கும் இடையிலான போராட்டம். இந்தக் கண்ணோட்டத்தில்தான் இந்தக் கதைப் பாடலை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்று நினைத் திருக்கிறேன்.
இப்படிப் பார்க்கும்போது நிறைய விசயங்கள் தெளிவாகின்றன. வேட்டுவர்கள் இந்தப் பகுதி வனமாக, காடாக இருந்தபோது காடு சார்ந்து வாழ்ந்த மக்கள். வேளாளர்கள் வனத்தை அழிக்கின்றார்கள்; வேளாண் நிலமாக்குகின்றார்கள். வேட்டுவர்களுக்கும், வேளாளர் களுக்கும் வாழ்நிலம் அடிப்படையில் தீராப்பகை எழுகின்றது.
அப்படியென்றால் கொங்குப் பகுதியில் இருக்கின்ற வேளாளர்கள் வேறு பகுதியிலிருந்து வந்தவர்கள் என்று சொல்லுகின்றீர்களா?
ஆமாம். அப்படித்தான் நினைக்கிறேன். இந்த விசயத்தை நான் மட்டும் சொல்லவில்லை. எனக்கு முன்பே பலர் சொல்லி இருக்கின்றனர். இந்த விசயத்தில் இரண்டு கருத்துப்போக்குகள் உள்ளன. ஒன்று வேளாளர் வேற்றுப் பகுதியிலிருந்து வந்தவர்கள். மற்றொன்று பூர்வ குடிகள். புலவர் செ.ராசு கொங்கு வேளாளர்கள் வேற்றுப் பகுதியிலிருந்து வந்தவர்கள் என்பதில் தீவிர நம்பிக்கை உடையவர்; தீவிரமாக ஆதரிக்கின்றவர். எந்தப் பகுதி யிலிருந்து வந்தார்கள் என்பதில் கூட இரண்டு கருத்துப் போக்குகள் உள்ளன. சிலர் தஞ்சைப் பகுதியிலிருந்து வந்தவர்கள் என்கிறார்கள். சிலர் காஞ்சிப் பகுதியிலிருந்து வந்தவர்கள் என்கிறார்கள். காஞ்சிபுரம் பகுதியிலிருந்து வந்ததற்குப் புலவர் செ.ராசு சில வாதங்களை முன் வைக்கின்றார். காஞ்சிக்கோயில் போன்று ஊர்ப் பெயர்களே அந்தப் பகுதியிலிருந்து வந்த நினைவுகளைத் தாங்கி நிற்கின்றன என்று கூறுவார். எந்தப் பகுதியிலிருந்து வந்தார்கள் என்பதில் ஒத்த கருத்து இல்லையானாலும், வெளியிலிருந்து வந்தவர்கள் என்ற கருத்தில் பல ஆய்வாளர்கள் தீவிரமாக உள்ளனர். இக்கருத்தை மறுத்து பூர்வக்குடிகள் என்று கூறும் ஆய்வாளர்களும் இருக் கின்றார்கள். புலவர் குழந்தை போன்றவரெல்லாம் அம்மாதிரியான கருத்தை உடையவரே.
அண்ணன்மாரோடு தொடர்புடைய முப்பூசை என்ற சடங்குப்பலி பற்றிக் கூறுங்கள்...
முப்பூசை அண்ணன்மாருக்கு மட்டுமே செய்வ தில்லை. சில காட்டுக் கருப்பு முதலான தெய்வங்களுக்கும் முப்பூசை போடுவார்கள். ஆடு, பன்றி, கோழி ஆகிய வற்றைப் பலியிடுவது முப்பூசை. இதில் பன்றி பலியிடுவது என்பது முக்கியமான விசயம். அண்ணன்மார் சாமி கதையில் பன்றி ஒரு முக்கிய இடம்பெறுகிறது. பொன்னர் - சங்கர் தலையூர் காளியோடு சண்டையிடுவதற்குப் பன்றிதான் காரணமாக அமைகின்றது. தலையூர் காளியின் பன்றி இவர்கள் நிலங்களில் அழும்பு பண்ணுகிறது. இதைப் பற்றி ‘அண்ணன்மார் கதையில் பன்றி’ என்றொரு கட்டுரை எழுதியுள்ளேன். அதில் பன்றி ஒரு குறியீடு என வாதித்துள்ளேன். பன்றி வனத்தில் வாழக் கூடியது. வேளாண்மைக்கு அழிவு விளைவிக்கக்கூடியது. ஆகவே வேளாளர்கள் இயல்பாகவே பன்றிக்கு எதிரானவர்களாக இருக்கின்றார்கள். ஆனால் வனத்தைச் சார்ந்து வாழும் வேட்டுவர்கள் பன்றிக்கு ஆதரவானவர்களாக இருக் கின்றார்கள். ஆகவே இந்த இரு பிரிவு மக்களுக்குமான குறியீடாகப் பன்றி இருக்கின்றது. அதனாலே முப் பூசையில் பன்றி இடம்பெறுகிறது.
முன்பெல்லாம் முப்பூசையின்போது பன்றி குத்தும் சடங்கே நடைபெறும். இன்று சில இடங்களில் பன்றி குத்துவது போன்ற பாவனைச் சடங்காக நடைபெறுகிறது. மோளிப்பள்ளி கோயிலில் ஒரு ஆள் பன்றி போல நடிப்பதும், அந்த ஆளை இன்னொரு ஆள் குத்துவது போன்றும் சடங்கு நடைபெறுகின்றது. இன்று வேளாளர் சாதியில் பன்றிக் கறி தின்பது விரும்பப்படாததனால் இது பாவனைச் சடங்காக மாறிவிட்டது என்று நினைக்கிறேன்.
கொங்குப் பகுதியில் நடைபெறும் வேறு வகைச் சடங்குகள்பற்றிக் கூறுங்கள்...
கொங்கு வேளாளர் உள்ளிட்ட இந்தப் பகுதியில் வேறு இடைநிலைச் சாதிகளின் திருமணம் உள்ளிட்ட வாழ்க்கை வட்டச் சடங்குகளில் பார்ப்பனர் இடம் பெறுவதில்லை. இங்குப் பார்ப்பனர் குடியிருப்புகளே மிகக் குறைவு. சோழ நாட்டில் இருப்பது போன்று இங்குப் பாடல் பெற்ற பெரிய தலங்களும் இல்லை. அங்கிருப்பது போன்ற அதிகாரம் பெற்ற கோயில்களை இங்குக் காண முடிவதில்லை. இங்குச் சின்னசின்ன குன்றுகள், கரடுகள் ஆகியவற்றில் பெருந்தெய்வக் கோயில்கள் இருக்கின்றன. இங்கு நீர் வளமும், நில வளமும் குறைச்சல். அதனால் பார்ப்பனர்கள் இங்கு அதிகம் இல்லை; சடங்குகளையும் அவர்கள் நடத்துவதில்லை.
இக்காலத்தில் நகர்மயம் வளர்ச்சியடைந்தபோது நகரத்தில் வசிப்பவர்கள் கவுரவத்திற்காகப் பார்ப்பனர் களைக் கொண்டு சடங்குகளைச் செய்கின்றனர். இப்போது கோயில்களில் திருமணம் செய்வது அதிகரித்து வருகிறது. அங்குப் பார்ப்பனர்கள் வந்துவிடுகின்றனர். கிராமக் கோயில்களுக்குப் பார்ப்பனரை வைத்து கும்பாபிசேகம் செய்வது இன்று வந்தாகிவிட்டது. பத்து இருபது வருடங் களுக்கு முன்பெல்லாம் அப்படி நடைபெறவில்லை. அப்போது பார்ப்பனர் எண்ணிக்கையே இங்குக் குறைச்சல்.
இங்கு நடைமுறையில் இருந்த, இருக்கும் சடங்கு களின் மூலம் சங்க இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கும் சடங்குகளைப் புரிந்துகொள்ள முடியும் என்று நினைக் கிறேன். அதனால் அவற்றின் மீது கவனம் செலுத்தி வருகின்றேன்.
இந்தப் பகுதியின் வட்டார ஆய்வு மீது கவனம் செலுத்திக் கொண்டிருக்கும்போதுதான் தி.அ.முத்துசாமிக் கோனாரின் ‘கொங்கு நாடு’ நூலைப் பதிப்பித்தீர்களா...?
ஆமாம். கொங்கு வட்டாரப் பகுதி பற்றிய ஆய்வின் மீது நான் ஆர்வம் செலுத்தும்போது, ஏற்கெனவே வெளிவந்திருக்கும் எழுத்துகளைத் தேடினேன். அப்போது அதில் அதிகமாக வேலை செய்த தி.அ.முத்துசாமிக் கோனார் பற்றி எனக்குத் தெரியவந்தது. அவரைப்பற்றி ஏற்கெனவே சிறுசிறு குறிப்புகள் எழுதி இருக்கின்றனர். புலவர் செ.ராசு, புலவர் குழந்தை போன்றோர் அவரை மேற்கோள் காட்டியிருக்கின்றனர். அவர்கள் அவரைப் பெருமளவுக்குக் கவனப்படுத்தவில்லை. ஆனால் கவனப்படுத்தப்பட வேண்டிய ஆள் அவர்.
முத்துசாமிக் கோனார் கொங்கு நாட்டு வரலாறு எழுதியிருக்கிறார். இந்தப் பகுதி இலக்கியங்களைப் பெரிய முயற்சி எடுத்துப் பதிப்பித்திருக்கின்றார். கொங்குநாட்டு வரலாறு பற்றி அவர் எழுதிய ‘கொங்குநாடு’ என்ற நூல் வெளியானது, அல்லது வெளிவரவில்லை என்று சொல்லு கிறார்கள். அப்போது அவர் ‘கொங்குவேள்’, ‘கொங்கு மண்டலம்’ என்ற இதழ்களில் ‘கொங்கு நாடு’ பற்றித் தொடராக எழுதியிருக்கின்றார். குறிப்பிட்ட காலத்திற்குப் பின்பு அவருக்குக் கண் தெரியாமல் போய் விடுகிறது. அதனால் தொடரை நிறுத்திவிடுகிறார். அவர் தொடராக எழுதி இதழில் அச்சுக் கோத்ததை வீணாக்காமல், அதையே புத்தகத்திற்கான பாரமாகவும் அச்சடித்து வைத்திருந்திருக்கின்றார். அப்படி வைத்திருந்த பிரதியின் பைண்டிங் சில பேரிடம் இருந்தது. இப்படி ‘கொங்குநாடு’ நூல் பதிப்பாக வெளிவராமலே சிலரிடம் இருந்தது.
‘கொங்குநாடு’ பற்றி தி.அ.முத்துசாமிக் கோனாருடைய எழுத்து மிக முக்கியமானது. அந்தக் காலத்திலேயே அவருக்கு வரலாற்றுணர்வு இருந்தது. அவர் புராணக் கதைகள், வாய்மொழித் தரவுகள், கல்வெட்டுகள் என்று எல்லாவிதமான ஆதாரங்களையும் வரலாறு எழுது வதற்குப் பயன்படுத்துகிறார். கார்மேகக் கவிஞர் எழுதிய கொங்கு மண்டல சதகத்திற்கு ஓர் உரை எழுதியிருக்கின்றார். அந்த உரை ஓர் அற்புதமான உரை. அந்த உரை அவருடைய புலமையை வெளிப்படுத்தக் கூடியது. அதே புலமையை இந்த ‘கொங்குநாடு’ நூலிலும் பார்க்க முடியும். அதனாலே தான் இந்த நூல் அவசியம் பதிப்பிக்கப்பட வேண்டும் என்று நினைத்தேன்; அச்சில் கொண்டுவந்தேன். அச்சில் கொண்டு வருவதற்கு நிறைய சிக்கல்கள் இருந்தன. அதனால் அந்த நூல் அச்சில் வந்திருக்கின்றது என்றுதான் சொல்ல முடியும். நல்ல பதிப்பாக வரவில்லை. நல்ல பதிப்பாகக் கொண்டுவர முயன்று வருகிறேன்.
தி.அ.முத்துசாமிக் கோனார் சிறப்பு, முக்கியத்துவம் என்ன?
அவருடைய சிறப்பு என்னவென்றால், அவர் இந்தப் பகுதியின் எல்லா இடங்களுக்கும் சென்றிருக்கின்றனர். புதிதாக ஓர் ஊரைக் கேள்விப்பட்டால் அந்த ஊரை உடனே சென்று நேரில் பார்த்துவிடுவார்.
1857-இல் பிறந்து 1944-இல் மறைந்தவர் முத்துசாமிக் கோனார். 1900க்கு முன்பு சைவம் சார்ந்த ஈடுபாடு உடையவராக விளங்கினார். பின்பு வட்டாரம் மீது ஆர்வம் காட்டத் தொடங்கினார். அந்தக் காலத்தில் கல்வெட்டுகள் பற்றியெல்லாம் பெரிதாக அக்கறை காட்டப்படவில்லை. ஆனால் முத்துசாமிக் கோனார் திருச்செங்கோடு பகுதியின் கல்வெட்டுகளையெல்லாம் படியெடுத்திருக்கிறார்.
அவர் திருச்செங்கோடு பகுதியின் இருபத்தைந்து இலக்கியங்களைப் பதிப்பித்திருக்கின்றார். இப்படி வட்டார வரலாற்றுக்கான சான்றுகளைப் பத்திரப்படுத்தி யுள்ளார். மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த முன்னோடியாக இந்தப் பகுதியில் தி.அ.முத்துசாமிக் கோனார் விளங்கினார்.
பழைய இலக்கியப் பதிப்புகள் மீதான உங்கள் ஆர்வம் பற்றிச் சொல்லுங்கள்...
நான் பதிப்புகள் தொடர்பாகப் பத்து - பதினைந்து கட்டுரைகள் எழுதியுள்ளேன். அவை இப்போது ‘பதிப்புகள் - மறுபதிப்புகள்’ என்ற தலைப்பிலான நூலாக வெளிவர உள்ளன.
நாமக்கல் வந்த பிறகுதான் எனக்குப் பழைய இலக்கியப் பதிப்புகள் தொடர்பாகப் பெரிய விழிப்புணர்வு வந்தது. அதற்கு முக்கியமான காரணம் பொ.வேல்சாமி. அவருடன் பேசும்போதுதான் இந்தப் பதிப்பு எவ்வளவு முக்கியமானது என்று தெரியவந்தது. பிறகு அதனுள் சென்று பார்க்கும்போது பதிப்புகள் தொடர்பாக ஆய்வு செய்வதற்கும், புதிய பதிப்புகள் கொண்டு வருவதற்கும் ஏராளம் இருக்கின்றது என்று உணர்ந்தேன். அதற்குப் பிறகுதான் பதிப்புகளை மையப்படுத்தியே பல கருத்தரங்குகளுக்குக் கட்டுரைகள் எழுதினேன்.
நம் தமிழ், செம்மொழி; இரண்டாயிரம் ஆண்டு இலக்கியப் பாரம்பரியம் உள்ள மொழி என்றெல்லாம் பேசிவருகிறோம். ஆனால் நம் மொழியிலேதான் பதிப்பு தொடர்பான உணர்வு மிகமிகக் குறைச்சலாக இருக் கின்றது. இதை நான் பல இடங்களில் சொல்லி வருகிறேன். இவ்வளவு இலக்கியங்கள் உள்ள மொழியில் பதிப்பியல் எவ்வளவு வளர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆனால் இங்குப் புதியவர் ஒருவர் பதிப்பு நுட்பங்களை அறிந்து கொள்வதற்கான நல்ல நூல்கூடக் கிடையாது. அவர் பழைய நல்ல பதிப்பாசிரியர்களின் பதிப்புகளைப் பார்த்துதான் அவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. 19-ஆம் நூற்றாண்டிலும், 20-ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்திலும் நம் பதிப்பு வளர்ச்சி உச்ச கட்டத்தில் இருந்த நேரம். அந்தக் காலத்தில், இன்றிருப்பது போன்ற வசதிகள் இல்லாத காலத்தில் அவர்கள் பயன்படுத்திய பதிப்பு நுட்பங்களை இன்று இழந்து விட்டோம் என்று தோன்றுகிறது. இன்று பழைய பதிப்புகளைப் புரிந்துகொள்வதற்கு அனுபவம் தேவைப்படுகிறது.
பழைய பதிப்புகளை இன்று மறுபடியும் பதிப்பிக்கும் போது பல விசயங்களை நீக்கி விடுகிறார்கள். இப்போது வை.மு.கோ. கம்பராமாயணப் பதிப்பை வெளியிடும்போது அருஞ்சொல் அகராதியை நீக்கி விடுகிறார்கள். அருஞ் சொல் அகராதி தேவை இல்லையென்றால் ஏன் அவர்கள் கொடுத்திருக்கிறார்கள்? இன்று பொருளடைவு, பாட்டு முதற்குறிப்பு அகராதிகளைக்கூட நீக்கிவிடுகிறார்கள். அப்போது நமக்குப் பதிப்புபற்றிய உணர்வு குறைந்து வருவது தெரிகிறது.
நாம் பழைய பதிப்புகளைப் பார்த்தோம் என்றால் ஒரு வளர்ச்சி தெரியும். சி.வை.தா-வுக்கும் வையாபுரிப் பிள்ளைக்கும் இடையில் ஒரு தெளிவான வளர்ச்சியைப் பார்க்க முடிகின்றது. ஆனால் 1950களுக்குப் பிறகு ஒன்றிரண்டு பதிப்புகளைத் தவிர, பதிப்பு வளர்ச்சியைப் பார்க்க முடியவில்லை. பதிப்பு வளர்ச்சி தேங்கிப் போய்விட்டது; இன்னும் சொல்லப் போனால் சீரழிந்து போய்விட்டது. இங்குப் பதிப்பகத்தார்களே பதிப்பா சிரியர்கள் ஆகிவிட்டனர். பதிப்பகத்தாருக்கும் பதிப்பாசிரி யருக்கும் உள்ள வேறுபாடுகளைக்கூட மறந்துவிட்டோம். நாம் ஒரு முக்கியமான துறையைக் கோட்டைவிட்டு விட்டோம். அதனாலேயே இந்தத் துறையின் மீது கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.
1950-களுக்குப் பின்னர் பல கல்வி நிறுவனங்களில் தமிழ்த்துறை அமைக்கப்பட்டிருக்கின்றது. தமிழியல் கல்வி வளர்ச்சியடைந்திருக்கின்றது. பிறகு எப்படிப் பதிப்பில் இவ்வாறான நிலைமை ஏற்பட்டது?
தமிழியல் கல்வி பரவலாகியிருக்கின்றது; கல்வித்துறை வளர்ச்சியடைந்திருக்கின்றது. ஆனால் புலமை வளர்ச்சி யடைந்ததாகத் தெரியவில்லை. புலமை வளர்ச்சியில் தொடர்ச்சி இருப்பதாகத் தெரியவில்லை.
கல்வி நிறுவனங்கள் வளர்ச்சி அடைந்திருக்கின்றன. நிறைய பேராசிரியர் பதவிகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் அவை வெறும் வேலை, ஊதியம் என்பதை மட்டும் இலக்காகக் கொள்கின்றன.
1950களுக்கு முன்னால் பார்த்தோம் என்றால் தகுதியுடையவர்கள் தமிழ்ப் பேராசிரியர் பதவிகளுக்கு வந்திருக்கின்றார்கள். அப்போது கல்வித் தகுதி பெரிய விசயமாக இல்லை. வையாபுரிப்பிள்ளையோ, தெ.பொ.மீ. யோ பார்த்தீர்களானால் துறை சார்ந்த பெரிய கல்வித்தகுதி உடையவர்கள் இல்லை. ஆனால் மிகமிகப் பெரிய புலமைப் பாடு மிக்கவர்கள். 1950களுக்குப் பிறகு நிறுவனங்களில் கல்வித் தகுதியைத்தான் பார்க்கின்றார்களே தவிர புலமையைப் பார்க்கவில்லை. அப்புறம் அவர்களுடைய முக்கியமான வேலையாகக் கற்பித்தல் மாறிவிட்டது. படைப்பு, ஆய்வு, பதிப்பு போன்ற சுயமான வேலை களுக்கான மதிப்பு குறைந்து போய்விட்டது.
நிறுவனமயப்படும்போது ஒரு துறை சீரழிந்து போய்விடுகிறது என்பதுதான் நமது அனுபவம். அது இங்கும் நடந்திருக்கிறது. இன்னொரு விசயம் நமது
சமூகம் குறைந்த வளர்ச்சியுடையது. தனக்குத் தேவையான எதையும் நமது சமூகம் கோரிப் பெறுவதில்லை. பொருளடைவோ, அருஞ்சொல் அகராதியோ இல்லாத பதிப்பை வாங்க மாட்டோம் என்று சொல்லக்கூடிய உணர்வு படித்தவர்களுக்கே இல்லை. அவர்களுமே எந்தப் பதிப்பு விலை குறைவாக இருக்கின்றதோ அதை வாங்குகிறார்கள். ஒரு புத்தகம் வாங்குவதற்கான அளவு கோல் விலை அன்று.
ஒவ்வொருவருக்கும் உள்ள தேவையின் அடிப் படையில் பலவிதமான பதிப்புகள் உண்டு. மாணவர் களுக்கான பதிப்பு, பாடநூலுக்கான பதிப்பு, பொது வாசகர்களுக்கான பதிப்பு, ஆய்வுக்கான பதிப்பு என்று ஒவ்வொரு தரப்பினருக்கான பல்வேறு வகைப் பதிப்பு பற்றிய உணர்வும் நம்மிடம் வளர்ச்சியடையவில்லை. இதனாலும் வாசகர் புத்தகத்தைத் தேர்ந்தெடுத்து வாங்குவதில் சிக்கல் இருக்கின்றது. இந்தச் சிக்கலைப் பயன்படுத்திக் கொண்டு பதிப்பகத்தார்கள் எதையாவது அச்சிட்டுப் பணம் பண்ணுகின்றனர்.
இன்னொரு காரணமும் உண்டு. கல்வி, படிப்பு எல்லாம் பார்ப்பனர்களுக்கு உரியது என்ற உணர்வு நம்மிடம் இருக்கிறது. மற்ற சாதிகளிடையில் ஒருவர் நூலகம் வைத்திருப்பதே வியப்புக்குரியதாக இருக்கின்றது. மற்ற சாதிகளுக்கும் கல்வி,படிப்பு எல்லாம் ஒரு சொத்து என்ற எண்ணம் இன்று வரைக்கும் கிடையாது. கல்வி எல்லோருக்கும் உரிய சொத்து என்ற எண்ணம் வளர வேண்டும். பல்வேறு தரப்பாருக்கும் உரிய பதிப்பு பற்றிய எண்ணம் வளர்ச்சியடைய வேண்டும். அப்போது பதிப்புத் துறையில் மறுமலர்ச்சி ஏற்பட வாய்ப்பு உண்டாகும்.
சென்ற நூற்றாண்டுகளில் பதிப்புத் துறையில் செயல்பட்டவர்கள் பற்றிக் கூறுங்கள்...
19-ஆம் நூற்றாண்டில் பல பேர் இருந்திருக்கின்றனர். இன்று நாம் ஆறுமுக நாவலர், சி.வை.தாமோதரம் பிள்ளை, உ.வே.சாமிநாத ஐயர் ஆகியோரைப் பிரதானப் படுத்திப் பேசுகிறோம். ஆனால் இப்போது உள்ளே சென்று பார்க்கையில் இன்னும் பல பேர் இந்தப் பதிப்புத் துறையில் ஈடுபட்டிருக்கிறார்கள்; சிறப்பாகச் செயற் பட்டிருக்கிறார்கள் என்பதும் தெரியவருகிறது. அவர்கள் எல்லாம் பேசப்படாமல் போய்விட்டார்கள். அவர்கள் பேசப்படாமல் போனதற்கு அரசியல் மட்டுமே பிரதான காரணம் என்று சொல்ல முடியாது. நம் சமூகத்தின் அசட்டைத் தன்மையும் ஒரு காரணம். இன்றைக்கும் மைய நீரோட்டத்தில் இருக்கக்கூடிய இலக்கியங்களைப் பதிப்பித்தவர்களை மட்டுமே பதிப்பாசிரியர்களாகப் பொருட்படுத்திப் பேசிக் கொண்டிருக்கிறோம். அப்படித் தான் சி.வை.தா., உ.வே.சா., வையாபுரிப்பிள்ளை ஆகியோரைப் பற்றிப் பேசுகிறோம். அப்படியில்லாமல் ஏராளமான சிற்றிலக்கியங்கள் இருக்கின்றன. தொல் காப்பியம், நன்னூல் தவிர பல இலக்கண நூல்கள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் யார் பதிப்பித்தார்கள்? இப்படிப் பார்க்கும்போது பலவிதமான ஆட்கள் தெரியவருவார்கள்.
மு.அருணாசலம் தன்னுடைய இலக்கிய வரலாற்றில் ஒன்றிரண்டு தொகுதிகளைத் தவிர, மற்றவற்றில் எல்லாம் நூல் பதிப்பு தொடர்பான விவரங்களைத் தந்திருக்கின்றார். அதில் பலவிதமான மனிதர்கள் தென்படுகிறார்கள். அப்படிப் பார்க்கும்போது சந்திரசேகர கவிராஜ பண்டிதர் என்ற ஒருவர் நிறைய இலக்கண நூல்களைப் பதிப்பித்தார் என்று தெரியவருகிறது. அவர் ஒரு முக்கியமான மனிதர். நன்றாகப் பதிப்பித்திருக்கிறார். நிறைய நூல்களை முதன்முதலாகவும் பதிப்பித்து இருக்கிறார். அவரைப் பற்றி உ.வே.சா. ‘தியாகராஜசெட்டியார் வரலாற்றில்’ ஒரு சிறு பகுதி எழுதியிருக்கிறார்; அவரைக் கேலி செய்யும் விதமாக எழுதியிருக்கிறார். கும்பகோணம் கல்லூரியில் தியாகராஜ செட்டியார் ஒரு வருடமோ, ஆறுமாதமோ விடுமுறையில் சென்று விடுகிறார். அந்த வேளையில் சந்திரசேகர கவிராஜ பண்டிதரை அவருடைய இடத்தில் வேலை செய்யச் சொல்லுவார்கள். அவர் திரும்ப வந்தவுடன் இவர் விலகுகிறார். விலகும்போது கல்லூரியின் முதல்வரான வெள்ளைக்காரரிடம் நற்சாட்சிப் பத்திரம் கேட்கிறார். அந்த வெள்ளைக்காரர் ஆங்கிலத்தில் நற்சாட்சிப் பத்திரம் கொடுக்கிறார். அதை மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொண்டு வந்து, மற்றவர்களிடம் கவிராஜ பண்டிதர் காட்டுகிறார். அதைப் பார்த்து மற்றவர்கள் நகைக்கின்றனர். அதில் ‘பெரும்பண்டிதராகிய தியாகராஜ செட்டியார் செய்த பணியை இவரும் சில காலம் செய்தார்’ என்றிருக்கும். இதைப் பற்றி உ.வே.சா. கூறும் போது ‘இது கவிராஜப் பண்டிதருக்குக் கொடுத்த நற்சாட்சிப் பத்திரம் அன்று; தியாகராஜ செட்டியாருக்குக் கொடுத்தது’ என்று கிண்டல் செய்வார். அவர் நிறைய இலக்கண நூல்களைப் பதிப்பித்திருக்கிறார் என்பது அருணாசலம் நூலிலிருந்து தெரிய வருகிறது. அவர் யார், அவருடைய பதிப்பின் சிறப்பு என்ன என்பது பற்றியெல்லாம் நமக்கு ஒன்றும் தெரியாது. இது மாதிரி பல பேர் இருந்திருக்கின்றனர். சிற்றிலக்கியங்கள் என்றால், முக்கூடற்பள்ளுவை யார் முதன்முதலாகப் பதிப்பித்தவர்? குற்றாலக்குறவஞ்சியைப் பதிப்பித்தவர் யார்? இப்படியான கேள்விகளை எழுப்பினால் பல பேரைத் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கும். இப்படி நாம் பேசினால்தான் நம் பதிப்பு வரலாறு முழுமை பெறும். நம்மிடம் பதிப்பு வரலாறு என்ற ஒன்றே இல்லை. நாம் திரும்பத்திரும்ப சி.வை.தா., உ.வே.சா. என்று பேசிக் கொண்டிருக்கிறோமே தவிர மற்றவர்களைப் பற்றிப் பேசுவதில்லை. உ.வே.சா.வுக்கு முக்கியத்துவம் கிடைத்ததற்குக் காரணம் அவர் பிறந்த சாதி. அப்புறம் அவர் செய்த வேலை.
உ.வே.சா. செய்த வேலைக்கு ஏற்ப அவருக்குத் தமிழ்ச் சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கிடைத்தது. அது அதிகம் என்று எனக்குத் தோன்றவில்லை. அவருக்குக் கிடைத்தது போலவே இன்னும் பலருக்கும் கிடைத்திருக்க வேண்டும். பல பேருக்கு மதிப்பு கிடைக்காமல் போனதற்குக் காரணம் அவர்கள் பொருட்படுத்தப்படாத சாதிக்காரர்கள் என்பதுவோ, மைய நீரோட்டத்தில் வராத புத்தகங்களைப் பதிப்பித்தவர்கள் என்பதுவோ ஆகும். நாம் முறையான பதிப்பு வரலாற்றை எழுதினோம் என்றால் இந்த மாதிரியான ஆட்களையெல்லாம் முக்கியப்படுத்தி எழுத வேண்டி யிருக்கும். ஆனால் அவர்கள் பதிப்பித்த பதிப்புகள் நம்மிடையே இருக்கின்றனவா என்பதும் சந்தேகமே. ஏனென்றால் ஆவணப்படுத்திப் பாதுகாக்கும் பழக்கமும் நம்மிடம் இல்லை. அதனால் பதிப்பு வரலாறு எழுதுவது என்பதும் சிக்கலான ஒன்றாக இருக்கின்றது.
நான் முத்துசாமிக் கோனார்பற்றி எழுதும்போது அவர் பதிப்பு நுட்பங்களையெல்லாம் எழுதியிருக்கிறேன். அவர் இருபதுக்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்து இருக்கிறார். அவர் போல எல்லா வட்டாரங்களிலும் இருந்திருப்பார்கள். அப்புறம் நிகண்டுகள் பதிப்பித்தவர் களையெல்லாம் தேட வேண்டும். இப்படிப் பல பேரைப் புதிதாகக் கண்டுபிடிக்க வேண்டும்.
சி.வை.தா., உ.வே.சா. ஆகிய இருவரும் பதிப்பு வரலாற்றில் பெறும் இடம் என்ன?
நான் முன்பே கூறியபடி அவர்கள் மைய நீரோட்டத்தில் இருந்த இலக்கியங்களைப் பதிப்பித்தவர்கள். அப்புறம் அவர்களுடைய நோக்கமும் முக்கியமானது.
சி.வை.தா.வின் நோக்கம் தமிழ் இலக்கியங்களை அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்பதுதான். ஓலைச் சுவடிகளில் இருந்தால் தமிழ் இலக்கியங்கள் அழிந்து போய்விடும். அவற்றை அச்சுக்குக் கொண்டு வந்துவிட வேண்டும் என்பது அவர் நோக்கம். இதற்கு மேலாகவும் சி.வை.தா.வுக்கு ஓர் உணர்வு இருந்தது. இதைப் பற்றிப் பலர் எழுதியிருக்கின்றனர். அவருக்குத் தமிழ்த் தேசிய உணர்வு இருந்தது; திராவிட உணர்வு இருந்தது. இந்த உணர்வோடு இருந்த ஒரே பதிப்பாசிரியர் அவர் மட்டுமே.
ஆறுமுக நாவலருக்கு சைவ சமய உணர்வு இருந்தது. உ.வே.சா.வுக்கு அப்படிப்பட்ட உணர்வு ஒன்றும் இல்லை. அவர் ஒரு தமிழ் நூலை அதுவாகவே மட்டும் பார்ப்பவர். தமிழ் நூல்களில் எது செல்வாக்குப் பெறும் நூல் என்பதிலும் அவருக்கு ஆர்வமும், கவனமும் இருந்தது. சி.வை.தா.வுக்குக் கிடைக்காத வாழ்நாள் உ.வே.சா.வுக்குக் கிடைக்கிறது. இதைப் பற்றி வையாபுரிப்பிள்ளை நன்றாக எழுதியுள்ளார். உ.வே.சா.வுக்குக் கிடைத்த வாழ்நாளின் மூலம் அவருடைய பதிப்புகளை மேலும் மேலும் வளர்த்து திரும்பப் பதிப்பிப்பதற்கு அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. உ.வே.சா. படிக்கக்கூடிய வாசகர் நோக்கிலிருந்துதான் எப்போதும் பதிப்பைத் தயாரிப்பார். அவருடைய முதல் சீவகசிந்தாமணி பதிப்பையும் இறப்புக்கு முன் வெளியிட்ட மூன்றாம் சீவகசிந்தாமணி பதிப்பையும் பார்க்கும்போது இதைத் தெளிவாக அறிந்துகொள்ள முடியும்.
வையாபுரிப்பிள்ளையிடம் காணப்படும் பதிப்பு வளர்ச்சிபற்றிச் சொல்லுங்கள்...
உ.வே.சா.விடம் காணப்படும் வாசகர் நோக்கிலான பதிப்பு என்ற கருத்தாக்கத்திற்குப் பிறகு, வையாபுரிப் பிள்ளையிடம் ஆய்வு நோக்கிலான பதிப்பு என்ற கருத் தாக்கத்தைக் காண்கிறோம். வையாபுரிப் பிள்ளையின் ‘பாட்டும் தொகையும்’ அப்படிப்பட்ட பதிப்பு. அதில் ஆசிரியர் அகர வரிசையில் பாடல்களை அமைத்திருக் கிறார். அதன் மூலம் ஒரே புலவருடைய பாடல்களை
சி.வை.தா., உ.வே.சா., வையாபுரிப்பிள்ளை ஆகியோர் அடுத்தடுத்த வளர்ச்சி நிலைகளைக் குறிக்கின்றனர். இவர் களுக்கிடையில் நல்ல உறவு இருந்தது. ஆனால் உ.வே.சா. என் சரிதத்தில் சி.வை.தா.வைக் குறைத்து மதிப்பிடுகிறார். உ.வே.சா.விடம் மற்றவர்களை அங்கீகரிக்காத போக்கு ஒன்று இருந்தது. இதற்கு வையாபுரிப்பிள்ளை சமாதானங்கள் கூறியிருக்கிறார்.
மர்ரே எஸ்.இராஜம் பதிப்பு பற்றி...
மர்ரே எஸ்.இராஜம் பதிப்பு ஒரு செய்யுளை எளிமை யாகப் படித்துக் கொள்வதற்கான பதிப்பு. அதனுடைய நோக்கமும் அதுதான். உரைநடை பெருமளவுக்கு வளர்ச்சி யடைந்துவிட்ட காலத்தில், வாசகர்கள் தங்கள் சொந்த முயற்சியிலேயே பழைய இலக்கியங்களைப் பயில் வதற்கான வாய்ப்பை உருவாக்குவதே அந்தப் பதிப்பின் அடிப்படை. அந்தப் பதிப்பில் முக்கியமான விசயம் ஒரு நல்ல பதிப்புக்குழு இருந்தது. அக்குழுவினர் தேர்ந்தெடுத்த பாடங்களைத் தந்திருக்கின்றனர்; சுருக்கமான, தெளிவான நல்ல முன்னுரை எழுதி இருக்கின்றனர். மர்ரே எஸ்.ராஜம் பதிப்பு ஒரு முக்கியமான பதிப்பு.
பழைய பதிப்புகளை எப்படி மீளக் கொண்டுவர வேண்டும்?
பழைய பதிப்புகளை அப்படியே நிழற்படப் பதிப்பு களாக மீளக் கொண்டுவர வேண்டும். தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் முன்பு அப்படிச் செய்தார்கள். அச்சுக்கோத்துக் கொண்டு வருவதென்றால் எந்த மாற்றமும் செய்யாது கொண்டுவர வேண்டும். அதற்கு நிழற்படப் பதிப்புதான் சரியாக இருக்கும். இன்னொரு பிரச்சினை இருக்கிறது. இப்போது உ.வே.சா. பதிப்பை மீளக் கொண்டு வருவது என்றால், உ.வே.சா. வாழ்ந்த காலத்தில் இறுதியாகக் கொண்டு வந்த பதிப்பையே நிழற்படப் பதிப்பாகக் கொண்டுவர வேண்டும். அவருக்குப் பிறகு உ.வே.சா. நூலகம் கொண்டு வந்த பதிப்புகளிலேயே மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. அதனால் உ.வே.சா. வாழ்ந்த காலத்து வந்த கடைசிப் பதிப்பு முக்கியமானது. அதைத்தான் கொண்டுவர வேண்டும். அப்படிக் கொண்டு வருவது பதிப்பு வரலாற்றுக்கும் முக்கியமானதாக இருக்கும்.