Saturday, August 9, 2014

திரு கிரிதரன் நவரத்தினம் அவர்களுடன் "வாழ்த்து" என்ற சொல் பற்றி ஒரு விவாதம் I : Discussion about Greet with V.N.Giritharan Editor in Chief Online Tamil Magazine since 2000 Part II

திரு கிரிதரன் நவரத்தினம் [V.N.Giritharan Editor in Chief Pathivukal.Com Online Tamil Magazine since 2000] அவர்களுடன் "வாழ்த்து" என்ற சொல் பற்றி ஒரு விவாதம் II :


செந்தில்குமரன் கிருஷ்ணமூர்த்தி :  கிரிதரன் நவரத்தினம் ஐயா ,

நன்நூல் உரிச்சொல்லாக கூறும் "தொழுதல்" என்ற சொல்லும்[நன்நூல் 453] பெயராக ,வினையாக,உரியாக ஒரே நோக்கத்தில், கருத்திலேயே எல்லா இடங்களிலும் வருவதால் அதனை உரிச்சொல்லாகக் கருதமுடியாது என்று கூற உங்களால் முடியுமா ? தொழு என்று வினையாக, தொழுகை என்று பெயராக, தொழுதல் என்று உரியாக தானே அது வந்து நிற்கின்றது. இப்போது வாழ்த்தல் என்ற உரிச்சொல்லை தொழுதல் என்ற உரிச்சொல்லுக்கு பதில் அவ்விடத்தில் பொருத்தி பாருங்கள். அப்போது நமக்குள் ஒரு தெளிவு கிடைக்கும்! உடம்பொடு கூடிய உயிரினுடைய தொழில் குணமாகிய தொழுதல் என்ற உரிச்சொல் தொழுகைகள் என்று பன்மையில் பயன் படுத்தாத போது அதே தன்மை,குணம்,பண்பு உள்ள வாழ்த்தல் என்ற சொல் மட்டும் எப்படி பன்மையில் வந்து நிற்கும் ?????

செந்தில்குமரன் கிருஷ்ணமூர்த்தி :   

வணக்கம் கிரிதரன் நவரத்தினம் ஐயா ,

[1] என் முதல் கேள்வி யாது எனில் நன்நூல் 453 கூறும் உரிசசொல்லுக்கான இலக்கண விதியை மறுக்கின்றிர்களா ?

[2]நன்நூல் தமிழ் இலக்கண படி தானே நாம் இந்த விவாதத்தை தொடர்கின்றேம் ?

[3]நன்நூல் 453 விதி யாது எனில் "துய்த்தல் துஞ்சல் தொழுதல் அணிதல் உய்த்தல் ஆதி உடல் உயிர்த் தொழில் குணம்" என்பது தானே ?

எமக்கு உங்கள் விடை கிடைக்குமா ? தொழுதல் என்ற உயிர்த் தொழில் குண உரிச் சொல்லுக்கான இலகிய உதாரணத்தை விரைவில் அளிக்கின்றேன்.

கிரிதரன் நவரத்தினம் :  
உரிச்சொல் என்பது உலகத்திலுள்ள உயிர் மற்றும் உயிரல்லாத பொருட்களின் இருவகைப்பண்பினை (குணப்பண்பு, தொழிற்பண்பு) உணர்த்தும் சொல். தொழுதல் என்பது உயிர்களின் தொழிற்பண்புகளிலொன்று. இவ்விதமான பண்புகளை உணர்த்தும் சொல்தான் உரிச்சொல். இவ்விதம்தான் நான் விளங்கி வைத்திருக்கின்றேன்.

செந்தில்குமரன் கிருஷ்ணமூர்த்தி :   தொழுதல் என்னும் சொல் உரிச்சொல்லாக வரும் எளிய உதாரணங்கள் :

[1] தொழு உரம்

[2]தொழு நோய்

[3]தொழு நோயாளர்கள்


செந்தில்குமரன் கிருஷ்ணமூர்த்தி :  //உரிச்சொல் என்பது உலகத்திலுள்ள உயிர் மற்றும் உயிரல்லாத பொருட்களின் இருவகைப்பண்பினை (குணப்பண்பு, தொழிற்பண்பு) உணர்த்தும் சொல். தொழுதல் என்பது உயிர்களின் தொழிற்பண்புகளிலொன்று. இவ்விதமான பண்புகளை உணர்த்தும் சொல்தான் உரிச்சொல். இவ்விதம்தான் நான் விளங்கி வைத்திருக்கின்றேன்.//

அப்படி எனில் தொழுதல் என்ற சொல் உரிச்சொல் தானே ? இதில் என்ன குழப்பம் ஐயா ?
தொழுதல் என்னும் சொல் உரிச்சொல்லாக வரும் எளிய உதாரணங்கள் :[1] தொழுத கையுள்ளும்

828. தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து.

[2]தொழு உயிர்
260. கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.

கிரிதரன் நவரத்தினம் : உங்களது உதாரணத்தின்படி தொழுதல் உரிச்சொல் அல்ல, ஆனால் தொழு என்னும் சொல்லினை உரிச்சொல்லாகக் கொள்ளலாம். தொழு என்னும் சொல் உங்களது உதாரணத்தின்படி பல் குணத்தை உணர்த்துமொரு சொல்லாக வருகிறது. தொழு உரம், தொழுநோய் இவையெல்லாம் அண்மைக்காலத்துக் கலைச்சொற்களென்று நினைக்கின்றேன். தொழுவம் என்பது கூடப் பழந்தமிழ்ச்சொல்லா என்பது ஐயமே. தொழுவத்துக்குப் பதிலாக மன்றம் என்றே முன்பு அழைக்கப்பட்டதாக எங்கோ வாசித்திருக்கின்றேன். தொழு நோய் என்பது கூட தோல் நோய் என்பதன் திரிபோ என்று எண்ணியதுண்டு. தொழு உரம் என்று அழைக்கப்படும் காரணம் ஏன் என்பது தெரியுமா? இதுபோல் வாழ்த்து என்பதற்கும் உதாரணங்களைக் கூறுங்கள் பார்ப்போம். தொழுத கையுள்ளும் என்னும் சொற்றொடரில் வரும் தொழுத உரிச்சொல்லா என்பதில் எனக்குச் சந்தேகமே.

செந்தில்குமரன் கிருஷ்ணமூர்த்தி :   கிரிதரன் நவரத்தினம் ஐயா , என் உதாரணங்கள் படி தொழுதல் உரிச்சொல் அல்ல என்று நீங்கள் கூறிவிட்டு அதன் பின் தொழுதல் என்ற சொல் உரிச்சொல் தான் என்ற முடிவுக்கு தாங்கள் வந்தது எப்படி ? நன்நூல் 453 கூறும் உரிசசொல்லுக்கான இலக்கண விதி "தொழுதல்" உரிச்சொல்லாக இருப்பதால் தானே ?

திருக்குறளில் வரும் தொழு உயிர், தொழுத கை இரண்டிலுமே தொழுதல் என்ற சொல் உரிச்சொல்லாக தான் வந்து உள்ளது.

 செந்தில்குமரன் கிருஷ்ணமூர்த்தி : "தொழு மனமே" இதில் தொழு உரிச்சொல் தானே ஐயா ?

ஐங்கரனை மனம் உருக தொழு மனமே உன் ஐம்புலனும் ஐங்கரன் பாதத்தில் வைத்திடவே நீர் கேட்பதெல்லாம் நினைப்பதெல்லாம் அருளிடுவான் சாந்தை ஊர் சித்தி விநாயகனே.

 செந்தில்குமரன் கிருஷ்ணமூர்த்தி : கிரிதரன் நவரத்தினம் ஐயா , "வையகந் தொழு கருக்குடி"----->இதில் தொழு உரிச்சொல் தானே ?

திருஞானசம்பந்தர் திருக்கருக்குடித்தலத்து இறைவன்[சிவன்] மேல் பாடியருளிய பதிகம் 3-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

நனவிலுங் கனவிலும் நாளுந் தன்னொளி
நினைவிலும் எனக்குவந் தெய்தும் நின்மலன்
கனைகடல் வையகந் தொழு கருக்குடி
அனலெரி யாடுமெம் மடிகள் காண்மினே.

 செந்தில்குமரன் கிருஷ்ணமூர்த்தி :
 [1] வழுத்து என்ற சொல் வாழ்த்து என்று மருவி நிற்பதை தாங்கள் அறிவிர்கள்.[வாழ்த்து என்னும் சொல் மக்களை வாழ்வித்தலும் இறைவனைப் போற்றுதலும் ஆகிய இருபொருள் தந்து மயங்கற்கிடனாக நிற்றலால், வழுத்து என்னும் சொல்லை அதனின்று திரித்தனர் முன்னை யறிஞர்.]

[2]திருத்தொண்டர்புராணம் பாடல் 934 ல்

"ஆயர் குலத்தை விளக்கிட வந்துத யஞ்செய்தார்;
தூய சுடர்த்திரு நீறு விரும்பு தொழும்புள்ளார்;
வாயினின் மெய்யின் வழுத்து மனத்தின் வினைப்பாலிற்
பேயுட னாடு பிரானடி யல்லது பேணாதார்.
ஆயர் குலத்தை விளக்கிட வந்துத யஞ்செய்தார்;
தூய சுடர்த்திரு நீறு விரும்பு தொழும்புள்ளார்;
வாயினின் மெய்யின் வழுத்து மனத்தின் வினைப்பாலிற்
பேயுட னாடு பிரானடி யல்லது பேணாதார். "

வரும் "வழுத்து மனத்தின்" என்பதை காண்க. இங்கு வழுத்து என்ற சொல் உரியாக தானே வந்து உள்ளது ?

 செந்தில்குமரன் கிருஷ்ணமூர்த்தி :  வழுத்த அரு மாதலி வயிர மார்பிடை அழுத்தினன் ...இராவணன் வதைப் படலம் - யுத்த காண்டம்-கம்பராமாயணம்

செந்தில்குமரன் கிருஷ்ணமூர்த்தி : வாய்ந்து வழுத்த வருவோனே! வழுத்த எதுவும் தருவோனே!----ஆரியூர் பத்மனாப ராமாநுஜ தாஸர் என்பவரால் எழுதப்பட்டது.

செந்தில்குமரன் கிருஷ்ணமூர்த்தி :
வழுத்து நெறியா வதும்என்று
நின்ற ஆயன் தனைநோக்கி
நிரைமேய்ப் பொழிக நீயென்பார். -- சண்டேசுர நாயனார் புராணம்

செந்தில்குமரன் கிருஷ்ணமூர்த்தி :
 மனம் அது நினைய வாக்கு
வழுத்த மந்திரங்கள் சொல்ல
இனமலர் கையில் கொண்டங்(கு) --  சிவஞானசித்தியார்

விவாதம் தொடரும்  .......


அன்புடன்,
கி.செந்தில்குமரன்