ஏன் இப்படி ஆனார்கள் ?
ஏன் இப்படி ஆனார்கள் ? நவீன இலக்கியம் படைக்கும் நோக்குடன் கதை ,சிறுகதை எழுதும் எழுத்தாளர்கள் சாதிய பிரச்சனைகளை கையாளும் போது தடம் மாறி போகின்றார்கள். ஈழத்து எழுத்தாளர் ஜெயபாலன் [ஆடுகளம் பேட்டைகார நடிகர்]அவர்கள் தன் புனைவில் [ அவளது கூரையின்மீது நிலா ஒளிர்கிறது குறுநாவல்] தன் சக மனுசியை எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு சிறுமை படுத்தி திரைஅரங்கின் இருட்டில் சல்லாபிக்கின்றார். கதையின் போக்கில் தன்னை ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்தவராகவும், தம் சினேகிதியை,காதலியை மேல் சாதி பெண்ணாகவும் கதாபாத்திரங்களை கட்டமைத்த அவர் சாதிய பிரசனைகளை கதையின் ஊடே பேசும் போக்கை ஒரு புறமும் , அந்த பெண்ணை சல்லாபிக்கும் போக்கை மறுபுறமும் கதையை கொண்டு செல்ல முனைகின்றார்.
இங்கு தமிழ் நாட்டில் தென்னாற்காடு வட்டார வழக்கில் எங் கதெ என்ற குப்பையை நாவலை எழுதியுள்ள இமையம் அவர்கள் ஆணின் பார்வையில் கதையின் போக்கை கொண்டு செல்கின்றேன் என்ற நோக்கத்துடன் , பெண்ணிய நியாங்களை மூடி மறைத்து விட்டு அவளை ஊமையாகி , வார்த்தைகளை எண்ணி பேசும் சிக்கனவாதியாகி [தஞ்சாவூரு பொண்ணு பேசாமலா இருக்கும்?] அவள் பக்க நியாயங்களை மறைத்து விட்டு எந்தளவுக்கு அவளை சிறுமை படுத்த முடியுமோ அந்த அளவுக்கு கொச்சை படுத்தி அவளை வேசியாக்கி அழகு பார்கின்றார் இமையம் அவர்கள்.
வர்க்க அமைப்பில் மேல் சாதியில் உள்ள ஆண்டான்களின் மேல் உள்ள கோபத்தை காட்டவேண்டுமானால் அந்த கால தஞ்சை பகுதி நக்சலைட்டுகள் போல ஆண்டான்களை அழித்தொழிப்பு செய்து சிறைக்கு போவதை விட்டு விட்டு அந்த மேல் சாதி பெண்களின் உடையை வக்கிர மனதுடன் அவிழ்த்து பார்க்கும் மன நோய் தனம் இவர்களுக்கு எதற்கு?