"............மூடர்முன்னே பாடல் மொழிந்தால் அறிவரோ
ஆடெடுத்த தென்புலியூர் அம்பலவா.........."
தனிப்பாடல்கள் மீது அன்பு கொண்ட மனதின் கட்டுரைகளாய் விரிகின்றது இன் நூல். தனிப்பாடல்கள் மரபு சார் யாப்பு கவிதைகள். புதுக் கவிதைகள் போன்றே வாழ்வைச் சுவாசிக்கும் , நேசிக்கும் இயல்பு உடையவை தான் தனிப்பாடல்களும். தனி மனித வாழ்வில் வழக்கு இழந்த யாப்பு இலக்கணக் கவிதைகள் மீது பொமு-வின் தமிழ் ஆசிரியமனம் தவழும் அழகு நிறைந்த விளையாட்டுக்கள் தான் இக் கட்டுரைகள்.
பொருள் சார் இவ் உலகில் ,வன்மம் நிறைந்த வழிகளில் பயணிக்கும் மனித மனங்களுக்கு வேகத்தடையாய் நிற்கின்றன இக் கட்டுரைகள். [ முன்னுரையும் ,பின்னிணைப்பும் கொண்ட 2 +14 கட்டுரைகள்.] முன்னுரையே தனிப்பாடல்கள் மீதான ஆய்வை அழகுடனும் ,பொருளுடனும் செய்கின்றன. தலைவனைப் பிரிந்த தலைவிக்கு நிலவுக்கூட நெருப்பாய் தகிக்கும் கொடுமை ,பிச்சைகாரர் பாடல் மூலம் வெளிப்படுகின்றது.['ஊரைச் சுடுமோ"... பாடல் ]. "யாப்பும்" தெரிந்த மனிதன் பிச்சைகாரரனாக அலையும் அவலம் இப் பாடலில் சொல்லப்படாத உள் பொருள்.
[1]காடும் செடியும் கட்டுரை ,தமிழ் கற்க கல்லூரிச் சென்ற மாணவன் பட்டப் பாட்டை கூறி அவனுக்கு கிடைத்த ஊன்றுகோலாக அமைந்த காலமேகத்தாரின் பாடல்களையும் ,பிற தனிப்பாடல்களையும் அறிமுகப்படுத்தி , தனிப்பாடல்களுக்கான கால-பொருள் வரையாரைகளையும் கூறுகின்றது. [புணர்சி விதிகளை கற்கும் பருவம் முதலா இல்லை மூன்றாமாண்டா என "கழகங்கள்" தீர்க்கமாக முடிவு செய்யுமா ?]
[2]வான் குருவியின் கூடு கட்டுரை, "எல்லார்க்கும் ஒவ்வொன்று எளிது" என்று கூறும் தமிழ்ப் பாட்டியின் செயுளுடன் விரிகின்றது. இக் கட்டுரையைப் படிக்கும் போது என் நண்பர் முதிர்ந்த தமிழ் பேராசிரியர் முனைவர் கரு நாகராசன் அவர்கள் செய்த "தமிழர் மனம் பற்றிய கோட்பாடு" மீதான ஆய்வின் தேவைகளையும் ,முக்கியத்துவத்தையும் உணர முடிகின்றது.
[3]சிவனானேன் கட்டுரை , பொமு-வும் ,இராம கவிராயரும் சென்னாபுரி [சென்னை] பட்டினத்தில் அடைந்த இடம் -பொருள் சார் துன்பங்களை "சென்னபுரி மைவிச் சிவனானேன் " பாடல் மூலம் கூறுகின்றது. [தமிழ் கற்ற "கற்றது தமிழ்" பிரபாகரன் சென்னை வாழ்வு அனுபவத்தையும் நம்மால் மறக்க முடியுமா?]
[4]அந்தகனே நாயகன் கட்டுரை,இரட்டைப் புலவர் பாடல் ஒன்றை பற்றியது.ஒருவர் கண்ணும் ,மறுவர் கால்களும் அற்ற புலவர்கள். கண் அற்றவர், கால் அற்றவரின் வழிகாட்டுதளில் தூக்கி ந்டந்து ஊர் ஊராகச் செல்வர்தனை நாடிச் செல்வார். இருவரும் கவி கூறி பொருள் நாடுவர். கல்வி அறிவு இல்லா பொருளாலாளர் புற முதுகுக் காட்ட ,நொந்து போன புலவர்களின் புலம்பலுடன் கூடிய நையாண்டிக் கவிதை தான் இக் கட்டுரை.
மூடர்முன்னே பாடல் மொழிந்தால் அறிவரோ
ஆடெடுத்த தென்புலியூர் அம்பலவா - [ஏடாகேள்!!!! ]அல்லது [ஆடகப்பொன்!!!!!]
செந்திருவைப் போலணங்கைச் சிங்காரித் தென்னபயன்
அந்தகனே நாயகனா னால்.
பொருள் :
தென்புலியூர் ->சிதம்பரம்
வடபுலியூர்->திருப்பாதிரிப்புலியூர் [கடலூர் ]
அம்பலவா->சிவனே
செந்திருவைப் போலணங்கைச் சிங்காரித்->அழகிய திருமகள் போல் அலங்காரம்
அந்தகனே->கண் அற்றவர்
முதல் இரு அடிகளை பாடியது யார் ? மறு இரு அடிகளை பாடியது யார்? என்று தர்க்க புத்தியுடம்(Logical Mind ) நம்மாலும் கேட்க முடிந்தால் நாமும் பொமு-வைப் போல கவி மனம் உள்ளவர் ஆவோம்!
[5]பழம் படு ப்னையின் கிழங்கு கட்டுரை, சங்க காலப் புலவர்களில் ஒருவரான சத்திமுத்தப் புலவர் பாடிய , நாம் பள்ளியில் கற்ற பாடல் பற்றியது. இவர் வறுமையால் வாடி தம் ஊர்விட்டு அயலூர் சென்று ஒரு குட்டிச் சுவரின் அருகில் குளிருக்கு ஒதுங்கியிருக்கும் போது பறக்கும் நாரை கண்டு, வறுமையிலும் தன் பிரிவாலும் வருந்திக் கொண்டிருக்கும் தன் மனைவிக்கு அதைத் தூதாக அனுப்புவது போல் பாடியது தான்
"நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வார்ச் செங்கால் நாராய்
நீயுநின் மனைவியும் தென்றிசைக் குமரியாடி
வடதிசைக்கேகுவீராயின்
எம்மூர்ச் சத்திமுத்த வாவியுள் தங்கி
நனைசுவர்க் கூரைக் கனைகுரற் பல்லி
பாடு பார்த்திருக்குமென் மனைவியைக் கண்டு
எங்கோன் மாறன்வழுதி கூடலில்
ஆடையின்றி வாடையின் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்திக்
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே"
இப் பாடலின் எளிமை கண்டு வியக்கும் பொமு , பாடலின் அழகையும் ,ஒப்பற்ற உவமையையும் இரசிக்கின்றார். [நீங்களும் தான் நாரையின் நீண்ட மூக்கை எதோ ஒன்று உடன் உவமைப் படுத்தி பாருங்கலேன் !]
இது போல மொத்தம் 2+14 கட்டுரைகள் கொண்ட இப் புத்தகம் ,பொமு-வின் சுய அனுபவத்துடன் தனிப்பாடல்களை வருடிச் சென்று வாசகர்களுக்கு புதுப் பார்வையை கொடுக்கின்றது .
அன்புடன் ,
கி.செந்தில்குமரன்
https://www.facebook.com/senthilkumaran.krishnamurth
http://vansunsen.blogspot.in/2014/02/net-of-spiro-essays-critics.html
குறிப்பு :
இக் கட்டுரை விமர்சனத்தை , இயற்கை ஒளியுடன் இயைந்த நம் திரைக் கலைஞன் திரு பாலுமகேந்தரனுக்கு கணிக்கை செய்கின்றேன்.
No comments:
Post a Comment