Saturday, February 25, 2017

ஒரு பயணமும் சில படிப்பினைகளும் Learning from a Trip



1 ஒரு பயணமும் சில படிப்பினைகளும்

தமிழக சட்ட சபையில் பதிலி ஜனநாயகம் (praxy democracy) தன் இறுதி பிழைப்பை அரசியல் விபச்சாரத்துக்கு உட்படுத்திக்கொண்டு இருந்த அந்த நாளின் இரவு தொடங்கிய பயணம் விடியற்காலை நான்கு மணி அளவில் வைதீஸ்வரன் கோவிலில் சென்றடைந்தது. காலை நேர நிலத்தடி  தண்ணீரின் வெதுவெதுப்பான குளியலும், கோவிலுக்கு எதிரில் உள்ள கடையின் காப்பியும் புத்துணர்ச்சி அளிக்க  கால்கள் செல்லும் பாதையில் மெல்ல நடந்தேன்....

சில பத்தாண்டுகள் கழித்த பின் மீண்டும் நான் செல்கின்ற  சாலை அது. வைதீஸ்வரன் கோவிலில் இருந்து அந்த ஊர் இரயில் நிலையம் வரையிலான சாலையில் விடியற்காலை பனிமூட்டத்தில் மெல்ல நடந்து சென்றேன். வயல்வெளிகளும் ,சின்ன சின்ன குடிசை வீடுகளுமாக இருந்த அந்த சாலை ஓரங்கள் இன்று வீடுகளாகவும் , சிறு தொழில் பட்டறைகளாகவும் மாறியிருந்தன.  சில வீடுகளில் இன்னும் மாட்டுத்தொழுவங்கள் பழைய நினைவுகளுக்கு என்ன அழைத்துச்சென்றன... இரயில் நிலையத்தில் இருந்து கோவில் செல்லும் சாலையில் இடது பக்கத்தில் அன்று இருந்த சில வீடுகளை இன்று காணவில்லை.. வைதீஸ்வரன் கோவிலில் வேலை செய்த தேவர் அடியார்களுக்கான வீடுகள் அவை... அன்று பாழடைந்து இருந்த வீடுகளை கூட இன்று காணவில்லை. இன்று அவை இருந்த இடம் கூட தெரியாத வகையில் வேறு என்னவாகவோ மாறியிருந்தன....

இரயில்வே கேட் மூடப்படும் மணி ஓசை என்னை நிகழ்விற்கு கொண்டுவர திரும்ப கோவிலை நோக்கி நடந்தேன். மணி ஐந்தரை இருக்கும்.. கோவிலின் நடை திறக்க பக்தர்கள் உள் நுழைந்து கொண்டு இருந்தார்கள்..கோவிலும் ,கோபுரமும்    மின்விளக்குகள்  இன்றி மேகம் கவ்விய இருட்டில் கிடக்க நானும் உள் சென்றேன்... வைதீஸ்வரனும் அவன் மனைவியுமாகிய தையல் நாயகியும் இன்னும் நித்திரையில் தான் இருந்தார்கள். பக்தர்களின் வருகைக்கு பின் வேகவேகமாக வந்த அர்சகர்கள் ஒருவர் பின் ஒருவராக தையல் நாயகியின் அறைக்குள் ஓடி திரையிட்டார்கள்... பத்து நிமிடம் கழித்து அர்சகர்கள் திரையை விலக்கினார்கள்...வெளியே சென்றார்கள்....பக்தர்கள் ஒருவர் பின் ஒருவராக உள் நுழைய  முந்திக்கொண்டு சென்றார் எங்கள் குழுவில் இருந்த அந்த பெரியவர்... “ஏய் ஏய் ஏய் “ என்று கொடுரமாக கத்திக்கொண்டு ஒரு அர்ச்சகர் உள்ளே ஓடினார்... பெரியவரை பார்த்து ”வெளியே போ” என்று சத்தமிட்டார். எங்கள் பயண குழுவில் வந்த 74 வயது நிரம்பிய பெரியவர் அவர்... கட்டிட மேஸ்திரி... 30 வயது அர்சகரின் குரல் கேட்டு திகைத்து  வெளியேவந்தவரிடம் “திருப்பதி மாதிரி 300 ரூபா டோக்கன் இங்கேயும் வாங்கனும்” என்றார் அர்சகர். தையல் நாயகிக்கு எதிரே நெய்விளக்கு விற்கும் இடத்தில் இருந்து இவற்றை பார்த்துக்கொண்டு இருந்த நான் ரத்தம் சூடேர “மரியாதையா பேச தெரியாதா உங்களுக்கு எதுக்கு ஏய் ஏய் என்று கத்துறிங்க ” என்று ஓங்கி குரல் கொடுத்தேன். ” 300 ரூபா டோக்கன் கொடுங்க” சாமி கும்பிட போறான் என்றார் அந்த பெரியவர் பணிவாக...... பெரிய பூசாரி அந்த வாக்குவாதத்தில் உள் நுழைந்தார்... “தொறந்து இருந்தா உள்ளே போவியா” என்று பெரியவரை பார்த்து சத்தமிட்டார்... “ஐயா காலையிலேயே எதுக்கு இப்பிடி ? “ அமைதியாக இருங்க என்று பெரிய பூசாரியை பார்த்து சமரசம் செய்யதற்காக கூறினேன்...... எதற்கும் படிவதாக அவர் இல்லை... சத்தமிட்டுக்கொண்டே இருந்தார்.

என்னிடம் இருந்த கடைசி அஸ்திரத்தை ஏவினேன்.

“யார் கட்டிய கோவிலுக்குள்ள யாரை வரக்கூடானு சொல்ற....” என்று நரப்பு புடைக்க கத்தினேன்...... “எங்க பாட்டன் முப்பாட்டன் கட்டின கோவில்குள்ள எங்களையே வரகூடாதுன்னு சொல்றியா?...நீயா கட்டன இந்த கோவில?”  என்று சத்தமிட்டேன்...

அந்த இடமே நிசப்தம் ஆனது... பெரிய பூசாரி பதில் பேசாமல் தையல் நாயகிக்கு எதிரே இருந்த குளத்துப்பக்கம் எஸ்கேப் ஆனார்...ஆனாலும் என் கோபம் இன்னும் தீர வில்லை... குழுவில் இருந்த நண்பனிடம் “சிதம்பரத்துக்கு போவோமில்ல அங்க இன்னும் பாப்பிங்க பாருங்க “ என்றேன்.

தையல் நாயகியை மட்டும் வணங்கிவிட்டு மேலும் அங்கு நிற்க மனம் இல்லாமல், வைதீஸ்வரனை வணங்காமல்   வெளியேறினேன்... எங்கள் பயண பேருந்தில் தனித்து வந்து அமர்ந்தவன்....யோசனையில் ஆழ்ந்தேன்... எது என்னை “யார் கட்டிய கோவிலுக்குள்ள யாரை வரக்கூடானு சொல்ற....” என்று சத்தம் போட வைத்தது என்று யோசித்தேன்... எங்க கரும்பூர் – கருநிலம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட இடத்தில் சோழர் கால சிவன் கோவில் பாழடைந்து பல நூற்றாண்டாக இருந்தது... கடந்த மூன்று வருடமாக அந்தக்கோவிலை முழுமையாக புதுபிக்கும் வேலையை செய்கின்றார் இந்த பெரியவர் மேஸ்திரி... அந்த ஊரில் பல ஏக்கர் நிலத்துக்கு சொந்தக்காரர்... கூலி வாங்காம இந்த சிவன் கோவில் கட்டிட புணரமைப்பு வேலையை செய்துகிட்டு இருகாரு இவரு.... தனக்கு தெரிந்தவங்க கிட்ட இருந்து நன்கொடையை வாங்கி கோவில் வேலைக்கு செலவு செய்துகிட்டு இருகாரு....கோவில சுத்தி விவசாய நிலமா இருப்பதால விவசாயிங்க கிட்ட பேசி கோவிலுக்கு வழியும் ஏற்படுத்திக்கொடுத்து இருக்காரு...  அப்பேர்பட்ட 74 வயசு “ராஜா ராஜா சோழனையே” கோவில விட்டு துரத்தின அந்த   அந்த முப்பது வயசு பூசாரிக்கு அந்த உரிமையை கொடுத்தது யாரு? என்று யோசித்தேன்... சிவனுக்கு சேவகம் செய்ய அன்றைக்கு சோழன் நியமித்த தேவர் அடியார்களை விபச்சாரிகளாக மாத்தியது யாரு ? என்று சிந்தித்தேன்.. அந்த தேவர் அடியார்களுடன் பாலியல் உறவு வைத்து குழந்தைகளை உருவாக்கி அவர்களை ஒரு சாதியா மாற்றிய கயவர்கள் யாராக இருக்கும் என்று சிந்தித்தேன்....தேவர் அடியார்கள் முறையையே டாக்டர் முத்துலச்சுமி அம்மா அன்னிக்கு சட்டசபையில் காங்கிரஸ்-சத்தியமூர்த்திய பார்த்து நாக்க புடுங்கற மாதிரி “உன்  வீட்டு பொம்பளைங்கள வேண்டுமானால் நீ அந்த தேவரடியார் வேலைக்கு அனுப்பு” என்று கூறி சட்டபூர்வமாக அழித்து     நினைவுக்கு வந்தது....


சிவ-சாமிக்கு கண் இருக்கா இல்லையானு எனக்கு தெரியாது.... ஆனா நெற்றியில மட்டும் கண்ணு கண்டிப்பா இல்லை என்பது மட்டும் எனக்கு ஊர்ஜிதம் ஆனது.  மீண்டும் பஸ்ஸை விட்டு இறங்கி நடந்தவன் கோவில் எதிரே நின்றேன்....


“ பாழ்பட்டு சிதைந்தழியும் உன்  வீடு  

ஆனாலும் என்மனதுள் என்றுமென்சிவனே “

என்று அவனை குரல் பாவில் மனமாற  வாழ்த்திப்பாடிவிட்டு அடுத்த ஊருக்கு புறப்பட்டேன்...